விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார்.

ஒரு முறை எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம்லிங்கனை பார்த்து ‘‘மகா முட்டாள்’’ என்று விமர்சித்தார்.

ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் என்ன செய்வது!’’ என்றார்.

அந்த பதிலுக்கு, பதிலடியாக விமர்சனம் செய்ய முடியாமல் எட்வர்ட் தலைகவிழ்ந்தார். பின்பு ஆப்ரகாம் லிங்கனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போதும் லிங்கன் விடவில்லை. ‘‘ஒரு முட்டாளிடம் ஒரு புத்திசாலி மன்னிப்பு கேட்பது அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும்’’ என்றார் தமாஷாக!

இப்படி தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை நகைச்     சுவையாக்கி, தூக்கிப் போட்டு தூள்தூளாக்க எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும்.

‘அமெரிக்கன் இன்டர்நேஷனல் கார்பரேஷன்’ அமைப்பின் தலைவர் மேத்யூ சீ ப்ரஷ் சொல்கிறார்:

‘‘என்னை விமர்சனம் செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் என் முன்னே வந்து குற்றங்குறைகளை எடுத்து சொல்லட்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்துவிடுவேன். நான் விமர்சனங்களை வரவேற்கிறேன், அவை என் முன்னால் இருந்து வந்தால் மட்டும்! பின்னால் இருந்து வந்தால் அவைகளை நான் கண்டுகொள்ளவே மாட்டேன்..’’ என்கிறார்.

ஒருவர் வாசனை அகர்பத்திகள் விற்பனை செய்து வந்தார். ‘‘இங்கு வாசனை அகர்பத்திகள் விற்கப்படும்’’ என்று பலகை எழுதி வைத்தார். அந்த வழியே வந்த ஒருவர் ‘இங்கு’ என்ற சொல் எதற்கு? தேவையில்லை என்றார். கடைக்காரரும் அந்த சொல்லை மட்டும் அழித்துவிட்டு மீதமுள்ள சொற்களை வைத்திருந்தார். அடுத்து வந்தவர் ‘அகர்பத்திகள்’ என்றாலே வாசனை என்று தானே பொருள். அப்படியானால் ‘வாசனை’ என்ற சொல் எதற்கு? என்றார். உடனே அந்த சொல்லையும் கடைக்காரர் அழித்துவிட்டார்.

இப்படி ஒவ்வொருவர் விமர்சனத்தையும் கேட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டார் கடைக்காரர். அப்போது அந்த வழியே வந்த ஒருவர் ‘ஏனப்பா.. உன் கடையை எங்கெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு வாசனை அகர்பத்திகள் கிடைக்கும் என்று ஒரு பலகை எழுதி வைத்தால் என்ன? ஏன் இந்த கஞ்சத்தனம்?’ என்று கேட்டார். கடைக்காரர் மண்டையை பிய்த்துக் கொண்டார்.

இப்படி எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டால் மண்டையை பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான். எந்த விமர்சனம் சரியோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.  மற்றவைகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் வேலையை மட்டும் கவனமாக பாருங்கள்!

ங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்பதை குறிப்பிடுகிறது.

விமர்சனம் என்பது விமர்சிப்பவரின் இயலாமையை காட்டுகிறது. அவரால்  முடியாததை நீங்கள் செய்து முடிக்கும் போது நீங்கள் விமர்சனத்துக்குள்ளாகிறீர்கள். எப்போதுமே பிரபலமானவர்கள் அநாவசியமாக அடுத்தவர்களை விமர்சிப்பதில்லை. அதற்கெல்லாம் அவர் களுக்கு நேரம் இருப்பதில்லை. மற்றவரை விமர்சிப்பவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்கள்.

உங்களை நோக்கி வரும் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொள்வதும், ஜீரணித்துக்கொள்வதும், பதிலளிப்பதும் ஒரு கலை.

விமர்சனங்கள் ஒருபோதும் உங்களை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் நன்றாக வேலை செய்தாலும் விமர்சனம் வரும். வேலையே செய்யாவிட்டாலும் விமர்சனம் வரும். உங்களை சுற்றி பலர் இருக்கும்போது நீங்கள் விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முடியாது. உங்களை பற்றி நான்கு பேர் விமர்சிக்கிறார்கள் என்றால், நாற்பது பேர் கண்களை உங்கள் செயல் உறுத்தியிருக்கிறது என்று அர்த்தம்.

சிலருடைய விமர்சனம் உங்களை பாதிக்காது என்று விமர்சிப் பவர்களுக்கே தெரியும். ஆனாலும் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பரிதாபம்தான் படவேண்டும். ஏன்என்றால் அவர்கள், தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நன்றாக பூத்து, காய்க்கும் செடிக்கு உரம் இடுவதைப் போன்றதுதான் விமர்சனமும்! அதை உரமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும். வென்னீராக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடக்கூடாது.

விமர்சனங்களை நீங்கள் ஒரு கலையாக கருதினால், அதை பற்றிய பயம் உங்களுக்கு போய்விடும். பயம் போய்விடும்போது, யார் விமர்சிக்கிறார்? என்பதை பார்க்காமல், விமர்சிக்கப்படும் கருத்து என்ன? என்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையான அக்கறையோடு சொல்லப்படும் விமர்சனமா? உண்மையான அக்கறையுடன் சொல்லும் பயனுள்ள விமர்சனங்களை கேட்டு உங்களையே நீங்கள் திருத்திக்கொள்ளவேண்டும். தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அப்படியே அதை அலட்சியம் செய்திடவேண்டும்.

ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால், விமர்சிக்கும் நபருக்கு எந்த தகுதியும் தேவையில்லை. ஆனால் விமர்சிக்கப்படும் நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள். காய்த்த மரம்தான் கல்லடிபடும். அதனால் விமர்சனங்களை நினைத்து சோர்ந்து போகாமல் அதனை பக்குவமாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால் அவர் கவனிக்கும் அளவுக்கு நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.

(Visited 46 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)