அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்

Filed in பயனுள்ள தகவல்கள் by on September 3, 2013 0 Comments

தேனின் பயன்கள்

மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது. கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக்குணங்கள் இருப்பதில்லை.தேனின் பயன்கள் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள்.நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்.

சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும். அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும்.

கலப்பட தேனுக்கான அறிகுறிகள்!!!

வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா? அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது.

சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படியென்றால், அது கலப்படமான தேன் ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.honey helping for beautification

இனி தேனின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.

சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதுவரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது. மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பொருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது. மொத்தத்தில் அழகுப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும்.

அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்

இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.

சிக்கலற்ற பட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப் பாருங்கள்.

ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக்கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.

பளபளப்பான கூந்தலுக்கு

தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.

தேவையற்ற முடிகளை நீக்குதல்

முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்பினால், இம்முறையைச் செய்து பாருங்கள். ஒரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள். பிறகு வெளியே எடுத்து, கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம். இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள். இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.

மாசு மருவற்ற சருமம் முகத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா?

அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும். அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

சருமம் கருமையடைதலைப் போக்க

சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள். பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள்.

தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா?

உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள். தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.

பருக்கள் சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.

அல்லாஹ் தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.

(68)உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),   (69) “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் (16:68)

 

(Visited 4,597 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)