குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் இருந்து இப்படியொரு ஒரு குடியசுத் தலைவர் தேர்தலை இந்த தேசம் சந்தித்ததும் இல்லை; இனி சந்திக்கப்போவதும் இல்லை எனலாம். இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட பதவியாக கருதப்படினும் நாட்டின் முதல் குடிமகன் என கவுரவமாக அழைக்கப்பட்டாலும் முப்படைகளின் தலைவரே அவர் என சிலாகிக்கப்பட்டாலும் அப்பதவியை ரப்பர் ஸ்டாம்ப் என்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என்றும் சில வேளைகளில் அழைக்கப்பட்டு வருவதையும் நாம் மறுப்பதில்லை.

1950ல் இருந்து இன்றுவரை பனிரெண்டு பேர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர்கள் வரலாற்றில் இரண்டுமுறை அப்பதவியை அலங்கரித்தவர் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பனிரெண்டு பேரில் ஏழுபேர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். அதில் ஆறுபேர் பதவி வகிப்பதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் தீவிர அரசியல் பிரமுகர்களாக இருந்தனர். மற்றொருவர் ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த நீலம்சஞ்சீவ ரெட்டியாவார்.

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த போதே மரணமடைந்தவர்கள் இருவர் ஒருவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன், மற்றொருவர் பக்ருதீன் அலி அஹ்மது ஆவார். இந்திய குடியசுத் தலைவர் பதவி இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து செயற்பாட்டுக்கு வந்தது.

1. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26.-1.-1950 – 13.-5.-1962)

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவ ரானார் ராஜேந்திர பிரசாத். 1950 ஜனவரி 21ஆம் தேதி முதல் 1962ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரராகவும் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.

2. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (13.-5.19-62 – -13.-5.19-67)

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவ ராகவும் இரண்டாவது குடியசுத் தலைவராகவும் பணியாற்றியவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டின் திருத்தணி நகரில் பிறந்தவர். தத்துவத்தில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். ஹிந்து கலாசாரத்தின் முக்கியப் பரப்புரையாளராய் திகழ்ந்தவர்.

3. டாக்டர் ஜாகீர் ஹுசைன் (13.5.67 — 13.5.69)

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சிறந்த கல்வியாளர். 13.5.67இல் இருந்து 13.5.69 வரை மட்டுமே குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். பதவிக் காலத்தை முடிக்கும் முன்னரே மரணம் அடைந்துவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் டெல்லி பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம் உள்ளிட்டவைகளில் உயர்கல்வி கற்றவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தனது வாழ்நாளில் பெற்றார்.

4. வரகிரி வேங்கட கிரி என்ற வி.வி.கிரி (24.8.69 – 24.8.74)

முன்னாள் மதராஸ் மாகாணத்தில் இன்றைய ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சிந்தால பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வி.கிரி. ஐரோப்பாவில் சட்டம் பயின்ற இவர் பிரபல தொழிற்சங்க வாதியாகப் பெயரெடுத்தார். மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராகப் பணியாற்றினார். ஜாகிர் ஹுசைன் மறைவை அடுத்து தற்காலிக குடியரசுத் தலைவராக பணியாற்றிய விவிகிரி முறைப்படி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5. பக்ருதீன் அலி அஹ்மது (24.8.74 – 11.2.77)

அஸ்ஸாமில் பிறந்தவர். லண்டனில் மேற்படிப்பு படித்தபோது நேருவை நேரில் சந்தித்து காங்கிரசில் இணைந்து விடுதலைக்காக பாடுபட்டார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். விடுதலைக்குப் பின்னர் நேருவின் அமைச்சரவையில் உணவு, வேளாண்மை, கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன் நிறுத்தப்பட்டார். 1974 ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 1977 பிப்ரவரி 11ம் தேதி வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார்.இவரது ஆட்சி காலத்தில் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது.

இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனம் என அழைக்கப்பட்ட எமர்ஜென்சி இக்காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திரா அரசு செய்த இமாலய தவறாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு விட்டது. எழுத்துரிமை பேச்சுரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பாதிக்கப்பட்டன.இது பிரதமர் இந்திரா காந்தியின் விருப்பத்தின் பேரில் நடந்தது எனினும் இந்த சட்ட அறிவிப்பில் பக்ருதீன் அலி அஹ்மது எவ்வாறு கையொப்பமிட்டார் என்ற வினா இன்று வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இவர் கொசவாவின் பிரிஸ்டினா பல்கலைக் கழகத்தினால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார். இவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களில் இரண்டாவது முஸ்லிம் குடியரசுத் தலைவராவார். அவ்வாறே பதவியில் இருக்குபோதே மரணம் அடைந்தோரில் இரண்டாமவராவார். பதவிக் காலத்தில் மரணம் அடைந்தவர்களில் டாக்டர் ஜாகிர் ஹுசைன் முதலாமவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நீலம் சஞ்சீவ ரெட்டி (25.7.77 – 25.7.82)

மதராஸ் மாகாணத்தில் இருந்து முதன்முதலாக ஆந்திரப் பிரதேசம் உருவான பின்பு முதலாவதாக முதல் அமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்ற முதல் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டி மட்டுமே. 1977ல் இந்திரா காந்தி ஆட்சியினை வீழ்த்தி அசுரபலத்துடன் ஆட்சியில் அமர்ந்த ஜனதா கட்சியின் செல்வாக்கினை நிரூபிக்கும் விதமாக நீலம் சஞ்சீவ ரெட்டியின் தேர்வு அமைந்திருந்தது.

7. கியானி ஜெயில்சிங் (25.7.82 – 25.7.88)

இந்திராவின் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்ச ராக இருந்தவர். இந்திராகாந்தி ஆணையிட்டால் அவர் வீட்டை பெருக்கி சுத்தம் செய்யவும் தயார் என பகிரங்கமாக அறிவித்தவர். இந்திராவின் ஆட்சிக் காலத்தில் பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்றுவந்த சீக்கிய கிளர்ச்சியாளர்களின் இயக்கமான காலிஸ்தான் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அதனால் பஞ்சாபில் மனித மீறல்கள் அதிகரித்தன. அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிரான அதிரலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களின் கோபத்தைத் தணிப்பதற்காக ஜெயில் சிங்கை குடியசுத் தலைவராக காங்கிரஸ் தெரிவு செய்ததாக அப்போது அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இருப்பினும் பஞ்சாப் பிரச்னை சூடுபிடித்ததே யொழிய குறையவில்லை. ‘ஆப்பரேசன் ப்ளு ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நீல நட்சத்திர நடவடிக்கை 1984ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை நீடித்தது. சீக்கியர்களின் புனித தலமாகக் கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது. பொற்கோயிலுக்குள் ராணுவத்துக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் சண்டை நடந்தது. இதில் இந்திய ராணுவத்தின் கவச வாகனங்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் இத்தாக்குதலில் இடம் பெற்றன. இதில் இந்திய ராணுவத் தரப்பில் 83 பேர் கொல்லப்பட்டனர். 220 பேர் கொடுங்காயம் அடைந்தனர்.

இந்த அதிரடித் தாக்குதலில் 1500 பேர் பலியாகி விட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. சீக்கியர்களின் பாரம்பரியமிக்க மிகப்பெரிய நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அகாலிதளப் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே இதில் கொல்லப்பட்டார்.

பொற்கோயிலில் நடத்தப்பட்ட நீல நட்சத்திர நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கையாக இந்திரா காந்தியை அவரின் சீக்கிய மெய்காப்பாளர்கள் படுகொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் பெரும் சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. பல்லாயிரம் சீக்கியர்கள் வன்முறைக்கு பலியாயினர். பெருஆலமரம் சாயும்போது சருகுகள் உதிர்வது வாடிக்கைதான் என இந்திராவுக்குப் பிறகு பதவி ஏற்ற ராஜீவ்காந்தி இந்த சீக்கியர் இனப்படுகொலைக்கு புதிய வியாக்கினம் கொடுத்தார். அது அப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோபத்தைத் தணிப்பதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த பிரபலத்தை உயர்பதவியில் அமர்த்துவதால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடாது. மாறாக அதிகரிக்குமே ஒழிய குறையப்போவதில்லை என்பதும் நிரூபணம் ஆனது.

8. ராமஸ்வாமி வெங்கட்ராமன் (25.7.87 – 25.7.92)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். காமராஜ் அமைச்சரவையில் இடம்பெற்று சிறந்த முறையில் பங்காற்றியவர். மத்திய அமைச்சரவையில் நிதி, ராணுவம் மற்றும் தொழில்துறை அமைச்சராக செயல்பட்டவர். 1989ம் ஆண்டு திமுக அரசை கலைத்திலும் 91ல் நரசிம்மராவை பிரதமராக்கியதிலும் இவருக்கு மறைமுகப் பங்குண்டு. ஒரே காலகட்டத்தில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் என நாட்டின் முக்கியப் பதவிகளில் கோலோச்சியது வரலாற்றின் வித்தியாசமான காட்சியாக அமைந்தது.

9. சங்கர் தயாள் சர்மா (25.7.92 – 25.7.97)

-மத்தியப்பிரதேச முதல் அமைச்சராகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் பதவிகளை வகித்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா மூன்று பிரதமர்களைப் பார்த்தவர். தேசிய அவமானமாக கருதப்பட்ட, பாசிச வெறியர்களால் நடத்தப்பட்ட பாபர் மஸ்ஜித் இடிப்பு இவர் குடியரசுத் தலைவராக இருக்கும்போது நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அவமானகரமான நிகழ்வைக் கண்டு மனம் கொதித்தார். பாசிசவாதிகளின் இந்த செயலால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானம் நேருமே பெயர் கெட்டுவிடுமே என செய்தியாளர்களின் கூட்டத்தில் கிட்டத்தட்ட கண்ணீர்விட்டே கதறினார். உலக அளவில் பி.பி.சி.யும், சி.என்.என்.னும், மஸ்ஜித் இடிப்பை முழுவதுமாகப் படம்பிடித்து காட்டிய போதும் மஸ்ஜிதின் ஒரே ஒரு கும்பம்தான் இடிக்கப்பட்டது என மத்திய அரசும் இந்திய ஊடகங்கள் பலவும் புருடா விட்டபோது மஸ்ஜித் இடிப்பை வன்மையாக கண்டித்தார். தனது அறிக்கையில் தரைமட்டமாக்கப்பட்ட மஸ்ஜித் என்றே குறிப்பிட்டு பூசி முழுகியவர்களின் மூக்கை பதம் பார்த்தார்.

மகாகவி இக்பாலின் கவிதைகளை சிலநேரங்களில் மேற்கோள் காட்டும் ஜவஹர்லால் நேருவைப் போலன்றி இக்பாலின் கவிதைகளை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் குறிப்பிடும் வி.பி.சிங் போன்றோ, மிர்சா காலிப், அமீர் குஸ்ரு கவிகளை அவ்வப்போது குறிப்பிடும் அடல்பிகாரி வாஜ்பாய் போலவோ பகவத் கீதையை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மேற்கோள் காட்டும் அப்துல் கலாம் போலவோ அல்லாமல் உரையாற்றும் போதேல்லாம் திருக்குர்ஆனின் வரிகளை மேற்கோள் காட்டும் சங்கர் தயாள் சர்மா அனைத்து மக்களையும் நேசித்தவர். திருக்குர்ஆன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான மறை என்றார். பலவேதங்கள் தங்களது இனத்தைப் பற்றி, பிரிவைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கடவுள் கொள்கையைக்கூட அவைகள் பொதுமைப்படுத்துவதில்லை என்று குறிப்பிடும் சங்கர் தயாள் சர்மா திருமறைக் குர்ஆன் பிற வேதங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு விளங்குகிறது என்பதை அழகுற விவரிக்கிறார்.

திருக்குர்ஆன் இறைவனை ரப்புல் ஆலமீன் என்று கூறுவதை சிலாகித்த சங்கர் தயாள் சர்மா, உலகம் அனைத்திற்கும் அவன்தான் இறைவன் என்று குர்ஆன் கூறுகிறது ரப்புல் முஸ்லிமீன் என்று குறிப்பிடவில்லையே என்று அவர் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றிய பட்டமளிப்பு உரைகள் இன்றளவும் கல்வியாளர்களால் பாராட்டப்படுகிறது.

10. கே.ஆர்.நாராயணன் (25.7.1997 – 25.7.2002)

கோச்செரில்ராமன் நாராயணன் என்ற கே.ஆர். நாராயணன் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இந்த தேசத்தின் முதல் தலித் குடியசுத் தலைவரான இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தாய்லாந்து, துருக்கி, சீனா, மற்றும் அமெரிக்காவில் இந்திய தூதராகப் பணியாற்றினார்.

சட்டம் மற்றும் அறிவியல் துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர். இவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ராஜ்யசபா தலைவராகவும் இருந்ததால் தனது கண்டனங்களை கூர்மையாகப் பதிவு செய்தார். தேசத்தந்தை காந்தியாரின் படுகொலைக்குப் பிறகு நாட்டை மிகவும் துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வு என்றார். இவரது பதவியின் கடைசிக் காலத்தில் உலகையே உலுக்கிய குஜராத் இனப்படுகொலை நடந்தது. குஜராத் இனப்படுகொலையைத் தடுக்க உடனடியாக ராணுவத்தினை அங்கு அனுப்பி வைக்கவேண்டும் என அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். அது வாஜ்பாயினால் புறக்கணிக்கப்பட்டது. இதில் கே.ஆர்.நாராயணனின் சான்றாண்மை வெளிப்பட்டது எனலாம்.

11. அவுல் பக்கிர் ஜெயினுல் ஆப்தீன் அப்துல் கலாம் (25.7.2002 – 25.7.2007)

இவர் இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். குடியரசுத் தலைவர்களில் இவர் போல் பிரபலம் பெற்றவர் யாரும் இல்லை எனும் அளவுக்குப் புகழ் அடைந்தவர். இவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவால் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் கே.ஆர்.நாராயணனை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன் நிறுத்துவதாக யூகங்கள் புறப்பட்டதால் செல்வாக்குமிக்க கே.ஆர். நாராயணனை எதிர்ப்பதற்கு மற்றொரு செல்வாக்கு மிக்க ஆளுமை தேவைப்பட்டது. சந்திரபாபு நாயுடு கலாம் பெயரை முன்மொழிந்த போது கலாம் இதற்கு சம்மதிப்பாரா? என சந்தேகம் தெரிவித்தவர்கள் தான் பாஜக தலைவர்கள்.

நான் சம்மதம் வாங்கித் தருகிறேன் என தைரியம் ஊட்டி கலாமை தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக்கினார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலாமை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதன் பின்னர் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஒரு முஸ்லிமை நாங்கள் தான் குடியரசுத் தலைவராக்கினோம் என பெருமை பீற்றிக் கொண்டார்கள்.

பாஜகவைப் பிடிக்காதவர்களும் கலாமை விமரிசிக்கும் சிலரும் கலாம் பாஜகவின் வேட்பாளர் என்றே இன்றளவும் கூறி வருகின்றனர். இது உண்மையன்று. கலாம் முன்னிறுத்தப்படாவிட்டால் கே.ஆர்.நாராயணன் முன்னிறுத்தப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடும் பாஜகவின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம் அந்தவகையில் பாஜகவின் மானத்தைக் காப்பாற்றியவர் அப்துல் கலாம் என்று வேண்டுமானால் கூறலாம். இந்திய ஏவுகணை இயலின் தந்தை இந்திய ஹிμ ஆற்றலின் பிதாமகன் என குறிப்பிடப்படும் அப்துல்கலாம் தமிழர்களின் நலத்தினை குறித்தோ முஸ்லிம்களின் அவலநிலை குறித்தோ பேசப்படும் அளவுக்கு அவர் கடமை ஆற்றவில்லை என பொதுவாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குடியரசுத் தலைவர் பணி என்பது வரையறுக்கப்பட்ட பணி அதில் அதிகார முறைகேடு செய்யாமல் இருந்ததே மிகப்பெரும் விஷயம் என பாராட்டுவோரும் உண்டு. அதனை நிரூபிக்கும் விதமாக இவருக்கு அடுத்து பொறுப்புக்கு வந்த குடியரசுத் தலைவரின் பணிகள் அமைந்தன.

12. பிரதிபா தேவிசிங் பாட்டீல் (25.7.-2007- – 25.7.2012)

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமைக் குரிய பிரதிபா பாட்டீல் சுற்றுப்பயணம் செய்யாத நாடுகள் உலகில் இன்னும் கண்டுபிடிக்காமல் மட்டுமே இருக்கமுடியும்.

சோனியாகாந்தி குடும்பத் திற்கு நெருக்கமானவர் என்ற ஒரே தகுதியைத் தவிர அவருக்கு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை எனலாம். பிரதிபா பாட்டீலை நினைத்து இந்திய பெண் குலம் ஒன்றும் பெரிதாக பெருமைபட்டுக் கொள்ள முடியாது என்பதுதான் நிஜம்.

13. பிரணாப் முகர்ஜி (25.7.2012 – ———-)

நீண்ட காங்கிரசு பாரம்பரியம் கொண்டவர் இந்திரா காலத்தில் இருந்தே பிரதமர் பதவியின் மீது இரண்டு கண்களையும் வைத்து வந்தவர். அவருக்கு ஆறுதல் பரிசாக இந்தப் பதவியை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.
–அபுசாலிஹ்

(Visited 2,130 times, 2 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)