கருத்து வேறுபாடு கொண்டவருடன்…

…குறைந்தபட்சம் கடுமை பாராட்டாமல் இருங்கள்!

கருத்து வேறுபாடு கொண்டவருடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும்..?

அது இயலாத காரியம்’ என்று நீங்கள் எண்ணினால், குறைந்தபட்சம் கடுமை பாராட்டாமல் இருங்கள். திட்டாதீர்கள், மோசமான வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். இழிவுபடுத்தாதீர்கள். பின்னர் இறுதிவரை தீர்க்க முடியாத பிரச்சினையாக அது உருமாறிவிடும். நிம்மதியும் இருந்த இடம் தெரியாமல் பறிபோய்விடும். எச்சரிக்கை!

DiffOfOpinion

ஸஹ்ல் இப்னு அம்ர் குறைஷிகளின் பிரச்சார பீரங்கி. முஸ்லிம்களைத் தாக்கிப் பேசுவதற்கென்றே குறைஷிகள் இவரை அதிகமதிகம் பயன்படுத்தினர். பத்ரு போரில் இவர் கைது செய்யப்படுகிறார். அப்போது உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்: ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் ஸஹ்ல் இப்னு அம்ருடைய முன்பற்கள் அனைத்தையும் சிதைத்து விடுகிறேன். இனிமேல் நமக்கு எதிராக அவர் பேசமுடியாது’.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வேண்டாம் உமர்! யாருடைய உறுப்பையும் சிதைக்கக் கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால், என்னை  இறைவன் சிதைத்துவிடுவான். நான் இறைத்தூதராக இருந்தாலும் சரியே’.

பின்னர் உமர் (ரலி) அவர்களுக்கு அருகே வந்த நபிகளார், ‘உமரே! நாளை ஒரு நாள் வரலாம். அன்று இந்த ஸஹ்ல் இப்னு அம்ர் செய்யும் செயற்கரிய செயலால் நீர் மகிழ்வுறலாம்’ என்றார்கள்.

மீண்டும் ஒருமுறை தூதுத்துவம் உண்மை என நிரூபிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது.

ஆம், குறைஷிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த  ஸஹ்ல் இப்னு அம்ர் முஸ்லிம்களின் பேச்சாளராக மாறினார். நபிகளாரின் மரணத்திற்குப்பின், அரபுகளில் பல கோத்திரத்தினர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினர். ஆயினும் மக்காவாசிகள் மட்டும் இஸ்லாத்திலேயே உறுதியாக இருந்தனர்.

காரணம் யார் தெரியுமா..? இந்த ஸஹ்ல் இப்னு அம்ர் அவர்கள்தான்.

ஆம், இக்கட்டான அந்தச் சூழ்நிலையில் மக்களிடையே எழுந்து நின்று, ‘குறைஷிகளே! இஸ்லாத்தைக் கடைசியாக ஏற்றுக்கொண்டவர்கள் நீங்கள். இஸ்லாத்தை விட்டு முதலில் வெளியேறியவர்களும் நீங்கள் தான் எனும் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடாதீர்கள். ஒட்டுமொத்த அரபு குலங்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆள்பட்டுவிடாதீர்கள்’ என்று அறிவு  சார்ந்த முறையில் உரை நிகழ்த்தினார். குறைஷிகள் இஸ்லாத்திலேயே இருந்தனர்.

உண்மையை உணரச் செய்வதற்கு ஆயிரம் வழிமுறைகள் இருக்கின்றன. ஆகவே கடுமை ஏன்..!? மோசமான வார்த்தைகள்தான் ஏன்..!? வேண்டாம்! கரத்தாலும், கருத்தாலும் யாரையும் காயப்படுத்த வேண்டாம்.

யாராவது ஒருவர் மோசமாக நடந்துகொண்டார் என்ற செய்தி நபிகளாருக்கு எட்டினால் அவரைக் கண்டிக்கும் நபிகளாரின் வழிமுறை என்ன தெரியுமா..? அவருடைய பெயரைக் குறிப்பிடாமல், ‘என்ன நேர்ந்துவிட்டது சிலருக்கு..? இப்படி.. இப்படி.. பேசுகின்றார்களே..’ என்றுதான் குறிப்பிடுவார்கள்.

தொழுகையில் வானை நோக்கி பார்வையை உயர்த்துவது தவறு. அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்: தொடர்ந்து சிலர் அவ்வாறு செய்துகொண்டிருப்பதை அறிந்த நபிகளார், ‘இந்த மக்களுக்கு என்னவாயிற்று..? தொழுகையில் தங்களுடைய பார்வைகளை மேல் நோக்கி உயர்த்துகின்றார்கள்? அவர்களுடைய பார்வை பறிபோக வேண்டும் என்று விரும்புகின்றார்களா என்ன..?’ (புகாரி) என்று சற்று கோபமாகக் கேட்டார்கள்.

ஆயினும் யாருடைய பெயரையும் அங்கு குறிப்பிடவும் இல்லை, திட்டவும் இல்லை, யாரையும் காயப்படுத்தவும் இல்லை.

நம்மோடு முரண்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய குறைகளைப் பகிரங்கப்படுத்தி பொதுச்சந்திக்குக் கொண்டுவந்து கேவலப்படுத்துவது சம காலப்போக்காக மாறிவருகின்றது. நாகரிகம் என்ற பெயரில் செய்யும் அநாகரிகம் இது. சமூகத்தின் சாபக்கேடு. ஆடைகளை கிழித்து பிறரைக் கேவலப்படுத்துவதை விட மகா கேவலமான விஷயம் இது. கொடுமையிலும் கொடுமை..!

இது ஒருபோதும் நபிவழியாக இருக்க முடியாது. முஸ்லிம்களின் நடைமுறையும் இதுவல்ல. உஹதுப் போரில் அண்ணலாரை எதிரிகள் தாக்கி பல்லை உடைத்தனர், படு குழியில் தள்ளினர். உடனே சில தோழர்கள், ‘இறைவனின் தூதரே! அந்த எதிரிகளை சபியுங்கள்’ என்றனர். அப்போது கருணை நபி (ஸல்) அவர்கள், ‘நான் சபிக்கக் கூடியவனாக அனுப்பப்படவில்லை. அருள்கொடையாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்றுதான் கூறினார்கள். நபிகளாரின் இந்த நாகரிகத்தை அல்லவா நாம் பின்பற்ற வேண்டும்..!

நபிகளாருடன் கடுமையான முறையில் விவாதம் புரிய கோபத்துடன் வந்தான் குறைஷி தலைவர்களுள் ஒருவனான உத்பா. உத்பாவுடைய மகன் பெயர் வலீத்.

‘ஒருவருடைய மகனின் பெயரைச் சொல்லி இன்னாரின் தந்தையே’ என்று அழைப்பது அரபுகளிடத்தில் பெரும் கண்ணியம் மிக்க  செயல்.

விவாதம் புரிய வந்த உத்பாவை நபிகளார், ‘சொல்லுங்கள்.. வலீதின் தந்தையே! முடித்துவிட்டீர்களா.. வலீதின் தந்தையே!’ என்று கண்ணியமாகவே அழைத்தார்கள்.

ஒருநாள்.. ஒரேயொரு நாள் உங்களோடு கருத்து முரண்பாடு கொண்டவர்களுடன் மேற்கூறியவாறு பேசிப் பாருங்கள். உங்கள் நிம்மதி  உங்களிடமே இருப்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

(Visited 40 times, 1 visits today)

Tags:

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Haja moinudeen says:

    நல்ல கருத்து பொறுமையை கடைபிடிப்போம் இன்ஷா அல்லா

  2. Anonymous says:

    நபி வழி நடப்போம் என்று சொல்பவர்கள் கூட ஆத்திரத்தில் நிதானம் தவறி விடுகிறார்கள். சிந்திக்க வேண்டிய விஷயம். நல்ல கருத்து .

  3. SingaiAnban says:

    காலத்துக்கு…ஏற்ற…கருத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)