திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி

Filed in செய்திகள் by on June 15, 2015 0 Comments

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினி கள் பறிமுதல் செய்யப் பட்டன.

போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

TVR_FraudInsurance
திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் வையாபுரி என்பவர், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் ஒருவர் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்து வருவதாக கூறி இருந்தார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் போலி ஆயுள்காப்பீட்டு நிறுவனம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் மாவட்டம் தாத்தாக் கண்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் வடிவேல் (வயது30) என்பவர் “அரசு அங்கீகாரம் பெற்றது” என போலியாக விளம்பரம் செய்து திருவாரூர் பள்ளி வாசல் தெரு வில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி வந்ததும், மாவட்டம் முழுவதும் 70 பேரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 100-ஐ வசூலித்து மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்றுமுன்தினம் வடிவேலை கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினிகளையும், மோசடி செய்ததற்கான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி மாணவர்கள் மறியல்

இதனிடையே வடிவேலு தனது நிறுவனம் சார்பில் திருவாரூரை அடுத்த புலிவலம் அரசு பள்ளியில் அறிவுதிறன் போட்டி நடத்துவதாக வும், இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி அளி¢ப்பதாகவும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து இருந்தார். இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது.

போலி நிறுவனம் நடத்தி வடிவேலு கைது செய்யப்பட்டதை அறியாத மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அறிவு திறன் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று புலிவலம் அரசு பள்ளிக்கு வந்து இருந்தனர். ஆனால் போட்டி நடை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் போட்டி நடக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், திருவாரூர்- திருத்துறைப் பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏமாற்றம்

இதுபற்றி அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோசடி நடைபெற்று இருப்பது குறித்து தகவல் தெரிவித்ததால் மாணவ- மாணவிகள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டனர். எனினும் போட்டி நடைபெறாததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

(Visited 113 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)