தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு!

Filed in செய்திகள் by on December 7, 2016 0 Comments

‘சிறப்பு வாய்ந்த ஆளுமைமிக்க தமிழக தலைவரை நாடு இழந்து விட்டது’ ஜெயலலிதா மறைவு!

Chennai: President Pranab Mukherjee paying his last respects to Tamai Nadu's former Chief Minister J Jayalalithaa at Rajaji Hall in Chennai on Tuesday. PTI Photo (PTI12_6_2016_000323B)

கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான்.

பொதுவாக ஒருவர் மரணிக்கும்போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும், பின்னர் மற்ற தலைவருக்கும் இதே புகழ் மாலைகளைச் சூடுவதும் வழக்கமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் விரும்பும் நபராக ஜெ. மாறியது எப்படி?

என்ன செய்தாலும் முஸ்லிம்கள் நம்மை ஆதரிக்க மாட்டார்கள் என்றும், முஸ்லிம்கள் திமுகவின் அடிமைகளாக உள்ளனர் என்றும் அவர் கருதியது அவரின் அத்தகைய செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். அப்படி முஸ்லிம்களால் அதிகம் வெறுக்கப்படும் நிலையில் இருந்த ஜெயலலிதா அதிக முஸ்லிம்களால் விரும்பத்தக்கவராக எப்படி ஆனார்?

முஸ்லிம் சமுதாயத்தை அரவணைத்தால் அவர்கள் நன்றி விசுவாசமுள்ள சமுதாயமாக இருப்பார்கள் என்பதை ஜெயலலிதா உணரத் தொடங்கினார். முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்த ஜெயலலிதா முஸ்லிம் சமுதாயத்தைத் தக்க தருணத்தில் அரவணைத்ததன் மூலமும், சிறுபான்மை சமுதாயத்தவர்களுக்குண்டான பாதுகாப்பை தனது நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்ததன் வாயிலாகவும் முஸ்லிம் சமுதாயத்தின் தேட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன!

ஆட்சிக்கு வந்தது முதல் டிசம்பர் ஆறு முன் எச்சரிக்கை கைது நடவடிக்கை ஒழிந்தது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக ஆணையம் அமைத்த நிகழ்வு 2004 ஆம் ஆண்டு பிஜேபி கூட்டணியுடன் அவர் சந்தித்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அவரது கரிசனப் பார்வை அதிகரித்தது!

அன்று பாஜகவிற்கு தமிழகத்தில் முழுக்குப் போட்டவர்தான் இன்றுவரை பாஜக தனிமரமாக யாராலும் சீண்டப்படாத, தீண்டத்தகாத கட்சியாக தனிமைப் படுத்தப்பட்டதற்கு இவரும் ஒரு முக்கிய காரணகர்த்தாவானார். பாஜகவை வனவாசத்திற்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அரவணைப்பையும் அதிகப்படுத்தினார் ஜெ..! அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு வித்திட்டு ஜெயலலிதா அவர்கள் அமைத்த ராஜரத்தினம் தலைமையிலான இடஒதுக்கீட்டு ஆணையம்.

முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தருணம்

அதுமட்டுமல்லாமல் விஷ்வரூபம் என்ற கமலஹாசனின் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியபோது அந்தத் திரைப்படத்திற்கு தடை விதித்தார் ஜெயலலிதா.

ஒட்டுமொத்த தமிழகத்தின் அரசியல்வாதிகளும், ஒட்டு மொத்த திரையுலகினரும் இந்த விஷயத்தில் அவரை எதிர்த்து கமலஹாசனுக்கு ஆதரவாக களம் கண்டனர். கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விட்டனர்.

ஆனால் யார் எதிர்த்தாலும் பரவாயில்லை; முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை நான் மதிக்கின்றேன் என்று சொல்லி விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தடையில் உறுதியாகவும் இருந்து, திரைப்படத்திலுள்ள ஆட்சேபனைக்குரிய வாசகங்களையும், காட்சிகளையும் நீக்க முஸ்லிம் சமுதாயத் தலைவர்களோடு கமலஹாசனை பேச்சுவார்த்தை நடத்த வைத்து, முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு ஜெயலலிதா அவர்கள் மதிப்பளித்த தருணத்தை மறக்கவே முடியாது..!

மனித நாகரீகமும், அரசியல் நாகரீகமும் தொடர வேண்டும்!

1987 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர் இறந்தபோது தமிழகத்தின் நிலை தலைகீழ்! திமுகவினரின் அலுவலகங்கள் அதிமுகவினரால் சூறையாடப்பட்டன. மறைந்த அன்றைய முதல்வர் எம். ஜி. ஆரின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த எம். ஜி. ஆரின் 40 ஆண்டுகால நண்பர் கருணாநிதி, நாட்டிற்கு எம். ஜி. ஆர் மறைவை அறிவிக்கும் முன்பே யாருக்கும் தெரியாமல் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார் என்பது நடந்த நிகழ்வு. காரணம்.. அ. தி. மு. க தொண்டர்களால் அவருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லப்பட்டது.

அதை நிரூபிக்கும் வகையில் அன்று சென்னையில் இருந்த கருணாநிதி சிலையும் சிதைக்கப்பட்டது. தி. மு. க. வினரும், தி. மு. க. வினரின் சொத்துக்களும் தாக்கப்பட்டன.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்; ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சியான தி. மு. க. வைச் சேர்ந்த ஸ்டாலினும், கனிமொழியும், மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான தே. மு. தி. க. தலைவர் விஜய்காந்தும் பொதுவெளியில் மக்களுடன் மக்களாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

அரசியல் நிகழ்வுகளில் கடுமையாக அதிமுகவும், திமுகவும் எதிர்த்துக் கொண்டாலும், இன்று மனித நாகரீகத்துடன் அவர்கள் நடந்துக்கொண்டதும், அதை அ.தி.மு.க.வினரும் எந்த சிறு சலனமும் இல்லாமல் அங்கீகரித்ததும், மக்களிடையும் அரசியல் நாகரீகம் வளர்ந்துள்ளதை பறைசாற்றுகின்றன! தமிழக மக்கள் பன்பட்ட மக்கள்; அவர்கள் இன்னும் பண்பட்டுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

தற்போது ஜெயலலிதாவின் மறைவின்போது தமிழக மக்களும், அதிமுகவினரும் நடந்துக் கொண்ட முறைகளும் தமிழகம் என்றும் அமைதி பூங்காவாகத் திகழும் என்பது குறித்து கட்டியம் கூறக்கூடியதாக அமைந்துள்ளன..!!

(Visited 10 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)