கட்டுமான பணியின்போது பரிதாபம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி

Filed in செய்திகள் by on March 31, 2015 0 Comments

TVR_CU_Acci

திருவாரூர் அருகே கட்டுமான பணியின்போது மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் படுகாயம் அடைந்த 16 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரை அடுத்த நீலக்குடியில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வளாகம் கட்ட நன்னிலம் தாலுகா நாகக்குடி கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பலான கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த சில மாதங்களாக இதே பகுதியில் இயங்கி வரும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியின் அருகே மத்திய பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடம் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் தற்போது 4-வது மாடி கட்டும் பணி நடந்து வந்தது.

கட்டிடம் இடிந்து விழுந்தது

நேற்று நடைபெற்ற கட்டுமான பணியில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று காலை 9 மணி அளவில் 4-வது மாடியில் மேற்கூரைக்கான கான்கிரீட் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற பகுதி திடீரென முற்றிலும் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்டனர். மேற்கூரை இடிந்து விழுந்த சத்தத்தில் அருகே சிமெண்டு கலவை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது கான்கிரீட் போடப்பட்ட பகுதி முற்றிலும் இடிந்து விழுந்து கிடந்தது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தொழிலாளர்கள் அலறினர்.

5 தொழிலாளர்கள் பலி

இதைத்தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் உடனடியாக நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நன்னிலம், திருவாரூர், குடவாசல், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 5 பேர் இறந்து விட்டது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த 16 பேரும் 108 ஆம்புலன்சு வேன் மூலமாக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், போலீஸ் ஐ.ஜி. சஞ்சய்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, நன்னிலம் தாசில்தார் அம்பிகாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

(Visited 26 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)