இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

 SocialWork

இறைவனை வணங்கி வாழும் முறைதான் இறை நம்பிக்கையின் அசைக்க முடியாத அடையாளம் என்று நினைக்க வேண்டாம். ஏன் என்றால் மக்களுக்கு சேவையாற்றுவதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால், இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொண்டு, மக்கள் தொண்டாக கருதப்படாது. இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பரிபூரணம் நிறைந்த பணியாக சிறப்புப் பெறுகிறது.

‘‘இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமானது ‘நோவினை தரும் பொருட்களை நடை பாதையிலிருந்து அப்புறப்படுத்துவது’. அவற்றில் உயர்வானது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறுகடவுள் இல்லை) என்று கூறுவது என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) திர்மிதி:2614)

பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் நோவினை தருவது கற்களும், முட்களும் மட்டும் அல்ல. மேடும், பள்ளமும், குண்டும், குழியும், குப்பையும், கூளமும், வீசிய கழிவுப் பொருட்களும் தான் நோயையும், வேதனையையும்,  விரக்தியையும் ஏற்படுத்துகிறது.

ஒரு இறை நம்பிக்கையாளன் தினந் தோறும் தான் செல்லும் பாதைகளில், இவ்வளவு கூத்துகளையும் உற்று நோக்கி, அவற்றை சரி செய்யாமல், கண்டும் காணாமல் போவது ஏற்புடையதல்ல. அவனுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) உள்ளதா? அல்லது அது மங்கிவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பொதுமக்களுக்கு பயன்படாதவனும், பொதுச் சேவைக்கு தன்னை தயார்படுத்தாதவனும் பரிபூரண முஸ்லிமாக ஆகிவிடமுடியாது.

இறை நம்பிக்கையின் உயர்வான நிலைக்கு ஆரம்ப நிலையாக வகிப்பதும், உந்து சக்தியாக இருப்பதும் ‘பொதுச்சேவை’ தான் என்பதை மேற் கூறப்பட்ட நபிமொழியில் இருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இறைவனுக்கு ஆற்றவேண்டிய சேவைகளில் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை பின்வரும் ஒரு நிகழ்வு உணர்த்திக்காட்டுகிறது.

‘‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்தி விட்டது. இத்தகைய மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்கு மன்னிப்பும் அளிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி: 652)

தொழுகையின் மூலம் இறைவனை வணங்கி, நன்றி செலுத்த வரும் ஒருவர், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் பொருட்களை அகற்றும் அவரின் ‘பொதுப்பணி’ இறைவனையே கவர்ந்துவிட்டது.

‘ஏழைக்காக பாடுபடுவது சமூக சேவை’

விதவைகள், ஏழைகளுக் காக பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் செய்பவரைப் போன்றவர் ஆவார். மேலும், இரவு காலங்களில் நின்று வணங்கி, பகல் நேரங்களில் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரி: 5353)

நானும் அநாதையைப் பராமரிப்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக் காட்டி கூறினார்கள். விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்பின் சஅத் (ரலி) நூல் : புகாரி (6005)

‘மரக்கன்றுகளை நடுவோம்’

மனிதர்கள் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியுமா? முடியவே முடியாது. மரங்களை வாழ வைப்பது மனிதர்களை வாழ வைப்பதற்கு சமம். மரங்களை வெட்டுவதும், மரக்கன்றுகளை பிடுங்குவதும் மனிதர்களை வெட்டி வீழ்த்துவதற்கும், மனித உயிர்களை பிடுங்குவதற்கும் சமம்.

இதனால்தான் ஒரு இறை நம்பிக்கையாளனின் நிலையை மரத்திற்கு உவமை காட்டினார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

‘‘ஒரு இறை நம்பிக்கையாளனின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை, (ஒன்றோடொன்று) உராய்வதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) புகாரி: 6122)

ஒரு முஸ்லிம் மரத்தைப் போன்று பிறருக்கு பலன் தரும் வாழ்க்கையாகவும், நிழல்போன்று பிறருக்கு அபயம் தருபவனாகவும், கனி போன்று கனிவாகவும், மலரைப் போன்று பிறருடன் முக மலர்ச்சியுடனும், வீட்டின் நிலையைப் போன்று பிறரின் நிலை அறிந்தும், உத்திரம் போன்று பிறருக்கு உதிரம் கொடுத்தும், எல்லோருக்கும், எல்லா விதத்திலும் பயனுள்ளவனாக வாழ வழி செய்யவேண்டும்.

‘‘ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது உயிரினமோ உண்டால், (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) புகாரி:6012)

ஒரு உண்மையான முஸ்லிம் சமூக நீரோட்டத்தில் கலந்து அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்கு சமூக தொண்டு செய்யவேண்டும்.

(Visited 368 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)