ஐலான் குர்தி – தண்ணீரில் முழுதாய் மூழ்கி முடிந்திருக்கிறது பாருங்கள்…

Filed in பல்சுவைப் பகுதி by on September 15, 2015 1 Comment

AylanKurdiTamil

பம்பரம் விடும் வயதில் என்னைப் படகில் ஏற்றி

பாதி வழியில் பட்டென்று இறக்கிவிட்டவர்கள் அவர்களல்ல.

நீங்கள்தான்.
என் தாயின் விரல் கோதிய என் தலைமயிர்களை

கடலின் அலை கோத நான் கண்ணயர்ந்திருக்கிறேன்.

பாருங்கள்.

தூங்குவதற்கு தொட்டிலே இல்லாத எனக்கு

கடற்பரப்பில் கட்டில் தந்த உங்கள் கருணையை

என்னவென்று சொல்லுவேன்.

எனது தந்தையின் விரல்களைப் பிடித்து நடந்த எனது கைகள்

இன்று மணலை இறுகப் பிடித்து மரத்துக்கிடக்கிறது

பாருங்கள்.

ஒரு வாளித் தண்ணீரை தலையில் ஊற்றும் போதே

திடுக்கிடும் எனது மூச்சு

இன்று தண்ணீரில் முழுதாய் மூழ்கி

முடிந்திருக்கிறது பாருங்கள்.

என் வீட்டின் முற்றத்தில்

முள்குத்தாமல் நடந்த எனது பிஞ்சுக்கால்கள்

இன்று நண்டுகளுக்கு நரமாமிசமாய்ப் போகிறது

பாருங்கள்.

ஒரு மெல்லிய குளிருக்கு

என் தாயின் மடிச்சூட்டிற்கு

சுருண்டுவிழும் எனது உடம்பு

கடல் மண்னில் குளிரலையில்

குளிர்ந்து கிடக்கிறது பாருங்கள்.
எங்கள் நாட்டில் ஒரு காலத்தில்

நெஞ்சை நிமிர்த்தி நடந்தவர்கள் நாங்கள்.

முகம் குப்பற மூழ்கடித்து விட்டீர்கள் நீங்கள்.
நா வரண்ட என் இரைப்பைக்கு

அரைக்கோப்பைத் தண்ணீர்தானே

நான் கேட்டேன்.

தரவில்லை நீங்கள்.

மூச்சுக்குழல் முட்டக்குடித்து முடித்திருக்கிறேன்.

தோற்றது நீங்கள்தான்.
உப்பில்லாத பண்டமாயினும்

ஒரு கவளம் தாருங்கள் என்று அழுதேனே.

தரவில்லை நீங்கள்.

எத்தனை உப்பை உறுஞ்சி

உப்பியிருக்கிறது எனது உடம்பு.

தோற்றது நீங்கள்தான்.
என் தம்பியோடு ஓடி விளையாட

ஒரு அடி நிலம்தானே கேட்டேன்.

தரவில்லை நீங்கள்.

இன்று கண்ணுக்கெட்டும் கடற்கரையில்

காலை ஆட்டித் தூங்குகிறேன்.

தோற்றது நீங்கள்தான்.
தண்ணீர் விளையாட

ஒரு கோப்பைத் தண்ணீர்தானே கேட்டேன்.

தரவில்லை நீங்கள்.

இன்று கடலில் கால் மிதக்க கண்ணயர்ந்திருக்கிறேன்.

தோற்றது நீங்கள்தான்.

ஏன் என்னைத் திரும்பிப் பார்க்கிறீர்கள்?

ஏன் உங்கள் கண்களில்

இன்று மட்டும் கண்ணீர் வருகிறது.

இத்தனை காலமும் நீங்கள்

எங்கிருந்தீர்கள்?

நான் மட்டுமா உங்கள்

கண்களுக்கு நன்றாகத் தெரிகிறேன்?
தாலாட்டுக்கேட்கும் வயதில்

துப்பாக்கி வேட்டுகள் கேட்டேன்

அப்போது எங்கிருந்தீர்கள்?

ஓடி விளையாடிய என் வீட்டை

என் தந்தையின் கல்லறையாக்கினார்கள்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

தாலாட்டிச் சோறூட்டிய தாயை

கண்முன்னே கர்ப்பழித்தார்கள்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

தண்ணீரில், நெருப்பில், தரையில், காற்றில்

கரைந்து போனோம்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

வீதியில், வீட்டில், கடையில், கடலில்

செத்துக்கிடந்தோம்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

மழையில், வெயிலில், குளிரில்,நதியில்

நாதியின்றி நனைந்து கிடந்தோம்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

கரையில்,வெயிலில்,காட்டில்.மேட்டில்

கதறிக்கதறி கத்தினோம்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

பசியில், தாகத்தில், ரத்தத்தில்,சேற்றில்

சேதாரமிழந்து செத்து மடிந்தோம்.

அப்போது எங்கிருந்தீர்கள்?

நான் யார் தெரியுமா?

நான்தான் உங்கள் தேசியவாதம்.

உங்கள் பிரதேசவாதம்.

உங்கள் மொழிவாதம்.

உங்கள் இனவாதம்.

உங்கள் நிறவாதம்.

அது நான்தான்.
ஒன்றே இறைவன் என்றிருக்க

உங்கள் இதயப்பரப்பில் உங்களுக்கும்

எங்களுக்குமிடையில் தேசியவாதத்தின்

முள்வேலி அமைத்தீர்களே

அது நான்தான்.

உங்கள் கண்ணீரிலும், எங்கள் கண்ணீரிலும்

ஒரே உப்புக் கரிக்கும்போது

நீங்கள் மட்டும் உன்னதமானவர்கள் என்று

ஒதுங்கி நின்றீர்களே

அந்த உத்தமம் நான்தான்.

எங்கள் வீட்டுக் கூரை இடிந்து

எங்கள் தலையில் விழுந்தபோது

‘என்ன சத்தம் இந்த நேரம்’

என்ற இசைக்கு மேளம் கொட்டினீர்களே.

அந்த இசை நான் தான்.

சிரியா எந்தப் படத்தின் கதாநாயகன்

என்று கேட்டீர்களே

அந்தப் படம் நான்தான்.

ஒரே குர்ஆன், ஒரே ஓசை, ஒரே பாசை

என்று ஓதும்போது

பாஷை வேறென்று எங்களைப் பிரித்தீர்களே

அந்தப் பாஷை நான்தான்.

முறிந்த காலையும், உடைந்தகையையும்

தூக்கிக் கொண்டு நாம் ஓடிவந்தபோது

இப்பக்கம் வராதீர்கள் இது எங்கள் பிரதேசம்

என்று பிரித்து அனுப்பினீர்களே.

அந்தப் பிரிப்பு நான்தான்.

ஒரு வாய்ச்சோறில்லாமல்

வீதிவழியே விழுந்து திரிந்தோம்.

உங்கள் பிரியாணியில்

எத்தனை முந்திரிக்கொட்டைகள் என்று

எண்ணிணீர்களே.

அந்த எண்ணிக்கை நான்தான்.
மீண்டு வரமுடியாத இடத்திற்கு

நான் முந்திவிட்டேன்.

என்னால் இனி வரமுடியாது.

உங்களால் வரமுடியும்.

நீங்கள் வந்தே ஆகவேண்டும்.

வாருங்கள். காத்திருக்கிறேன்.

என்னையும் உங்களையும் உருவாக்கியவனிடம்

எமது கதைகளைச் சொல்லுவோம்.
பசி தாளமுடியாமல்

பூனை இறைச்சியைத் தின்ற கதையை

நான் சொல்கிறேன்.

சர்வதேசப் பிறை, உள்நாட்டுப் பிறை

பிரச்சினையில் கண்ட தீர்வைக் கதையாய்க் கூறுங்கள்.

 

நன்றி: Usufdeen : WhatsApp – அடியக்கமங்கலம் நண்பர்கள்  

(Visited 50 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. SingaiAnban says:

    கண்ணீர் வருகிறது…
    மாபாவிகள்…வாழும்… உலகமடா… இது… … கண்ணுறங்கு…
    என்னுயிரே….கண்ணுறங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)