“சூயிங்கம் மெல்லாவிட்டால் சிந்திக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால், வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்” என்றார் லீ

சிங்கப்பூரின் சூயிங்கம் தடைக்கு காரணம் என்ன?

1992-ம் ஆண்டில் சிங்கப்பூரில் சூயிங்கம்- தடை கொண்டுவரப்பட்டது

லீ குவான் யூ- ஒரு சிறிய துறைமுகத் தளத்தை உலக வணிக மையமாக மாற்றியவர்.

சுத்தத்தையும் நேர்த்தியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த அவர், சிங்கப்பூரின் சூயிங்கம் மீதான தடைக்கும் காரணமானவராக பார்க்கப்படுகின்றார்.

சூயிங்கம் மீது அவருக்கு அப்படியென்ன வெறுப்பு?

இன்று சிங்கப்பூர் வாழ்க்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களில் ஒன்றாக சூயிங்கம்-தடை உள்ளது.

நெடுஞ்சாலைகளை கண்டமாதிரி கடப்பது, கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட கண்ட இடங்களில் கிறுக்குவது, துப்புவது, மூக்கைச் சீறிப்போடுவது, கழிப்பறை அல்லாத இடங்களில் சிறுநீர் கழிப்பது, பொதுக் கழிப்பறைக்கு சென்றபின்னர் தண்ணீரை ஊற்றி கழுவாமல் வருவது இப்படி எதையுமே சிங்கப்பூரில் செய்யமுடியாது என்று சட்டம் தடுக்கின்றது.

அப்படித் தான் இந்த சூயிங்கம் மீதான தடையும்.

1965-ம் ஆண்டு சுதந்திர நாடானபோது, வளங்கள் குறைந்த சிறிய நகரமாக காட்சியளித்த சிங்கப்பூர் பிழைப்பதற்கான திட்டத்தை வகுத்தார் அதன் முதலாவது பிரதமர் லீ குவான் யூ.

‘மூன்றாம் உலக பிராந்தியத்தில் முதலாம் உலகத்து சோலையை உருவாக்குவது’ தான் அந்த பிழைப்புத் திட்டம் நோக்கம்.

நீண்டகாலத்துக்கு முன்பே, மற்ற வளர்ந்த நாடுகளை விடவும் சுத்தத்தாலும் அழகாக செதுக்கப்பட்ட புல்வெளிகளிலாலும் சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பாலும் வேகமாக முன்னேற்றம் கண்டுவிட்டது சிங்கப்பூர்.

கேம்பிரிட்ஜில் கல்விகற்ற லீ எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்த்தார்.

துப்பிவைக்கப்பட்ட சூயிங்கங்கள் தெருக்களில் ஒட்டிக்கிடக்கும் காட்சியால் தாங்கள் எதிர்பார்க்கின்ற நேர்த்தி கெட்டுபோய்விடுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கருதினார்கள்.

நடைபாதைகளிலும் ரயில்களின் தானியங்கி கதவுகளிலும் ஒட்டப்பட்டுக்கிடந்த சப்பித்துப்பிய சூயிங்கங்களை தாங்கள் அடைய நினைக்கின்ற நாட்டுக்கு அசிங்கமாகவும் தங்களின் இலக்கு மீது நடத்தப்படுகின்ற வெளிப்படையான தாக்குதலாகவும் அதிகாரிகள் உணர்ந்ததாக அமெரிக்க எழுத்தாளர் டாம் பிளேட் கூறுகின்றார்.

1992-ம் ஆண்டில் தான் சிங்கப்பூரில் சூயிங்கம் தடை செய்யப்பட்டது. லீ குவான் யூ தனது 31 ஆண்டுகால பிரதமர் வாழ்க்கையை முடித்திருந்த காலம் அது. மூத்த அமைச்சர் என்ற அந்தஸ்துடன், நாட்டின் இயக்கத்துக்கு பின்னால் ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்தார் லீ.

‘மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்ற ஒரு அரசாகத் தான் நாங்கள் பார்க்கப்பட்டோம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மிகவும் ஒழுக்கமுள்ள, மகிழ்ச்சியான இடத்தில் நாங்கள் இன்று வாழ்கின்றோம்’ என்று லீ குவான் யூ பிபிசியின் பீட்டர் டே-யிடம் 2000 ஆண்டில் கூறியிருக்கிறார்.

‘சூயிங்கம் மெல்லாவிட்டால் சிந்திக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால், வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்’ என்றார் லீ.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு பொதுக் கொள்கையில் தீர்வு இருப்பதாக நம்பினார் லீ.

இப்போதுள்ள சட்டப்படி, ஒருவர் தனது சொந்தத் தேவைக்காக மட்டும் சிறிய அளவில் சூயிங்கத்தை சிங்கப்பூருக்குள் கொண்டுவரமுடியும்.

2004-ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க- சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னர், மருந்தாளர்களும் பல்மருத்துவர்களும் மருத்துவ தேவைக்காக சூயிங்கம் விற்கமுடியும். அதுவும் மருத்துவரின் பரிந்துரை வாங்குபவர்களுக்கு அவசியம். அந்த சூயிங்கத்தை கண்ட இடத்தில் துப்பிவைத்தால் அபராதம் கடுமையாக இருக்கும்.

(Visited 20 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)