ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

Filed in வரலாறு by on March 31, 2015 0 Comments

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !
H.Q. நஜ்முத்தீன்.

எனக்கு மூத்தவர்களால் அன்புடன் ஹாஜியார் சேனா ஆனா (ஹாஜியார் செய்யது அப்துர் ரஹ்மான்) என்று அழைக்கப்பட்டவரும், எல்லோராலும் (B.S.A) பி.எஸ்.ஏ.ஹாஜியார் என்றும் அழைக்கப்பட்டவருமான எனக்கெல்லாம் முன்மாதிரியாக (Roll Model) திகழ்ந்தவருமான காக்கா பி.எஸ்.ஏ (B.S.A) அவர்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பிச் சென்றது. மடைதிறந்த வெள்ளம் போல கண்ணீரை வரவழைத்தாலும் சப்ரன் ஜமீல் என்ற பெருமானாரின் பொன்மொழியை ஏற்று அன்னாரின் வாழ்வில் நடந்த ஒரேயொரு துளியை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

‘சாதனை வரலாற்றில் பி.எஸ்.ஏ.’ என்ற புத்தகத்தில் காக்கா அவர்கள் நேரடியாகவே பேசுகிறார்கள்:

என் பாதையில் ஒரு திருப்பம் !

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 5-வது மாநாடு தந்த பெருமிதத்தை சுமந்து கொண்டு கார் சென்ற திசையில் இரண்டு பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே போனார்கள். இருவரின் தோள் மீதும் புத்தகப்பைகள்.

கார் ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று கவனமில்லாமலே விளையாடிய அந்த இருவரையும் கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது-இருவரில் ஒருவர் ஆண். அடுத்தவர் பெண். இருவரும் வளரிளமைப் பருவத்தினர். தங்களைக் கார் கடந்து போவதைக் கண்டதும் பாதை ஓரமாக அவர்கள் நின்றார்கள். வண்டிக்குள்ளிருந்த என் தொப்பியைப் பார்த்ததும், அந்தப் பெண் தன் தாவணியை முக்காடாக்கிக் கொண்டாள். எனக்குத் திடுக்குற்றது. காரை நிறுத்தச் சொன்னேன். இதைக் கண்டதுமே அந்தப் பெண் பிள்ளை தலை குனிந்தாள்.

“இந்தாம்மா ! நீ முஸ்லிம் பெண்ணா?”

அவள் தலை மேலும் குனிந்தது.

“எங்கே போய்க்கிட்டிருக்கே – புத்தகச் சுமையைத் துக்கிக்கிட்டு?”

“ஹைஸ்கூல்லே படிக்க ஆசைப்பட்டா நாகூர் பெண்ணுங்க நாகப்பட்டிணம்தானே போகனும் வாப்பா? அஞ்சு வகுப்புக்கு மேலே படிக்க ஆசைப்படற நம்மவங்களுக்கு நாகூர்ல ஏது பள்ளிக்கூடம்?”

“அந்தப் பையன் யாரு?”

அவனைப் பார்த்தேன். மிரண்டு போய் ஒரு மரத்தின் மறைவில் எட்டிப் பார்த்தபடி நின்றான்.

“எங்க வீட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கான்.”

“நடுரோட்டிலே ரெண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டே போறீங்களே! இது சரியில்லையே !”

“பஸ்ல போக வசதியில்லேன்னா பள்ளிக்கூடத்துக்கு நடந்துதானே போகணும்? நடந்தா களைப்பு தெரியும். ஓடினா சுறுசுறுப்பா இருக்கும் வாப்பா !” என்றவள் வாயை மூடிக் கொண்டு புன்னகைத்தாள்.

“அவன் இந்துக் குடிப் பையன். நீங்க தொப்பி வச்சிருக்கிறதைப் பார்த்ததுமே பயந்துட்டான்… என்றாள். யதார்த்தமாக !

“சரி..சரி…! அவனையும் கூப்பிடு. ரெண்டு பேரையும் ஸ்கூல்லே விட்டுட்டுப் போறேன்…” கதவைத் திறக்கப் போன என் காதில் கேட்டது.

“நாளைக்கும் இதே நேரம் இதே வழியா நீங்க வருவீங்களா வாப்பா?”

அந்தப் பெண்பிள்ளையின் கேள்வியைக் கவனித்தேன்.

“வரமாட்டீங்க இல்லே? அப்படியானா போங்க. நாங்க ஓடிப் பிடிச்சுக்கிட்டே போனா, நாகப்பட்டிணமே எங்க பக்கத்திலே வந்துடும்..”

அந்தப் பெண் திரும்பி நடந்தாள். அவனையும் அழைத்துக்கொண்டு ஓடினாள். எவ்வளவு புத்திக் கூர்மை? இதைக் கேட்டதுமே வண்டியை நான் நாகூருக்குத் திருப்பச் சொன்னேன்.

இந்தத் திருப்பம்தான் நாகூரில் கிரசெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு என்னுள் அன்றைக்கே விதையை ஊன்றச் செய்தது !

விழித்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும், பயணத்தின் போதும் சமுதாய முன்னேற்றம் என்ற ஒரு சிந்தனை காக்கா பி.எஸ்.ஏ மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி. தமிழகம் முழுவதும் பட்டி-தொட்டி, பெருநகரம், சிற்றூர் என்று எல்லா முஸ்லிம் மக்களின் மனதில் பதிந்த அந்த தாரக மந்திரம் தான் பி.எஸ்.ஏ. என்ற அந்த மூன்றெழுத்து. ‘சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் நம்மவர்கள் முன்னேற வேண்டும்’ என்ற ஒரு உந்துதலால், அல்லாஹ்வின் அருளால், அவர்கள் மூலம் கட்டிக் கொடுத்த கட்டிடங்கள் மற்றும் அக்கட்டிடங்களால் பயன்பெற்ற எண்ணற்ற சகோதர சகோதரிகள்தான் அவர்களது வாழ்வின் சாதனை !

BSA

சுமார் 150 கோடிக்கும் மேல் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தாலும், ‘சமுதாய சிந்தனை கொண்ட தொழிலதிபர்கள்’ வரிசையில் இடம்பெற்ற மிகச்சிலரில் பி.எஸ்.ஏ. காக்கா அவர்களும் சேர்ந்திருப்பது உலக முஸ்லிம்கள் வியக்கும் ஒரு செய்தியாகும் ! சென்ற மாதம் தான், ‘வாழ்வின் எல்லா துறைகளிலும் சேவை செய்த உலக முஸ்லிம்கள்’ என்ற புத்தகம் படித்தேன். ஒவ்வொரு துறையிலும் பலர் இடம் பெற்றிருந்தாலும் எங்களது காக்கா B.S.A. அவர்கள் சமுதாய சிந்தனை – சமுதாய முன்னேற்றம் என்ற துறையில் இடம் பிடித்தது நாம் செய்த பெரும் பாக்கியம் என்று கருதினாலும், வல்ல நாயனின் அழைப்பை ஏற்று அவர்கள் சென்றதற்கு நாம் பொறுமை காத்து, அவர்களது மறுமை வாழ்வு சிறப்பாக அமைய துஆ செய்வோமாக. ஆமீன்.

(Visited 51 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)