வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

Filed in கட்டுரைகள் by on November 1, 2015 0 Comments

பொருளாதார நெருக்கடி

கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளே, கடனில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அப்படி வட்டிக்கு கடன் வாங்கும் வங்கிகளே பொருளாதார நெருக்கடியால் திவாலாகிப் போவதை வரலாறு பதிவு செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சுனாமியால், நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சர்வதேச வங்கிகளே நிதி நெருக்கடியில் சிக்கின. பொருளாதார மந்தநிலையால் வங்கிகளில் கடன் பெற்ற நிறுவனங்கள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இஸ்லாமிய வட்டியில்லா வங்கி

ஆனால், இந்த நிதி நெருக்கடி பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இது, வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளை இஸ்லாமிய வட்டியில்லா வங்கியின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடனுக்கு வட்டி வசூலிக்காமல் வங்கிகளை வெற்றிகரமாக நடத்த முடியுமா? என்ற கேள்விக்கு அப்போதுதான் விடை கிடைத்தது.

இலாபத்திலும், நஷ்டத்திலும் பங்கு என்பதுதான் இஸ்லாமிய வங்கிகளின் அடிப்படைக் கோட்பாடாகும். 1975 ஆம் ஆண்டு துபையில் முதல் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டது. வட்டி பெறும் வங்கிகளைவிட அதிக லாபம் தருவதால் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிகள் முதலீட்டாளர்களை அதிகம் கவருகின்றன.

2009 ஆம் ஆண்டு வரை 36 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த இஸ்லாமிய வங்கிகள் தற்போது 75 நாடுகளில் விரிவடைந்துள்ளன. இப்படிப்பட்ட வட்டியில்லா இஸ்லாமிய வங்கிகள் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாமிய நிதியத்துக்கான இந்திய மையத்தின் (ஐசிஐஎஃப்) பொதுச் செயலர் ஹெச். அப்துர் ரகீப் பதிலளிக்கிறார்.

வட்டியில்லாமல் வங்கிக் கடன் வாங்க முடியுமா?

இஸ்லாத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. வட்டி வாங்குவோருக்கு பிற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை விட மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனத் திருக்குர் ஆனிலும் நபிமொழியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணத்தைக் கொடுத்து பணத்தைப் பெறுவதே வட்டியாகும். தொழில் என்றால் ‘அசெட்’ இருக்க வேண்டும். அதனால்தான் இஸ்லாமிய வங்கிகள் லீசிங், பங்குதாரர் போன்றவற்றில் பங்கேற்கின்றன.

இஸ்லாமிய வங்கிகள் கடன் பெறுபவரின் லாபத்திலும், நஷ்டத்திலும் பங்கு பெறுகின்றன. உதாரணமாக, வியாபாரிகள், குறுவணிகர்கள் சாதாரண வங்கிகளில் வட்டிக்குக் கடன் பெற்று தொழில் செய்து கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவர். இதில் நஷ்டம் ஏற்பட்டால் வணிகர்கள்தாம் பெறுப்பேற்க வேண்டும்; வங்கிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. இதனால கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால், இஸ்லாமிய வங்கிகளில் கடன் பெற்றால் லாபமோ, நஷ்டமோ அதில் வங்கிகளும் பங்கேற்கின்றன. இதன் காரணமாக இந்த வகையான வங்கிகள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமன்றி, ஜப்பான், சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனி, பிரேசில் உள்பட 75 நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பிரபல முன்னணி வங்கிகளே பல்வேறு பெயர்களில் வட்டியில்லா கடன் சேவையை வழங்கி வருகின்றன.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை இஸ்லாமிய வட்டியில்லா வங்கியால் வழங்க இயலும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இந்த வங்கிகள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் கடன் வழங்குமா?   இஸ்லாமிய வங்கிகள் அனைவருக்கும் பொதுவானவை. தொழில் முனைவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுடன் வட்டியில்லா கடன் வழங்கப்படும். அந்தத் தொகையுடன் அவர்கள் தொடங்கும் தொழிலில் கிடைக்கும் லாபம், நஷ்டம் ஆகியவற்றை வங்கியுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மலேசியாவில் உள்ள இஸ்லாமிய வங்கிகளில் 40 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளனர். இதேபோன்று பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த வங்கிகள் மூலம் கடன் பெற்று லாபகரமாக தொழில் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் வட்டியில்லா வங்கிகள் ஏன் தேவை?

உலகின் ரொக்கக் கையிருப்பு என்பது தற்போது வளைகுடா நாடுகளில் தான் உள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்த என்ஆர்ஐக்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் வட்டியில்லா வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

இந்தத் தொகையை இந்தியாவில் தொடங்கப்படும் ஸ்மார்ட்சிட்டி திட்டம், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு வட்டியில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிக லாபம் தரக்கூடிய ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகள் உள்பட சூதாட்டம், மது உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்ற தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யவே அதிகமானோர் விரும்புகின்றனர். இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழை மக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், சிறு வணிகர்களை ஊக்குவிப்பதற்கும் யாரும் முதலீடு செய்வதில்லை. இந்த நிலையை வட்டியில்லா வங்கிகள் மாற்றும். ஒரே இடத்தில் பணம் தேங்கிக் கிடக்காமல், அனைவருக்கும் வட்டியில்லா கடன் வழங்கி, ஏழைகளையும் பணக்காரர்களாக மாற்றும். வட்டியில்லா வங்கிகள் மது, சூதாட்டம், ஆபாசத் திரைப்படம், பேரழிவு ஆயுதங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யாது.

இந்தியாவில் இந்த வங்கிகள் எப்போது தொடங்கப்படும்?

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வட்டியில்லா வங்கிகளைத் தொடங்கிவதற்காக பல்வேறு முயற்சிகளை இஸ்லாமிய நிதியத்துக்கான இந்திய மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த வங்கிகளை இந்தியாவில் தொடங்கலாம் என்று மத்திய திட்டக் குழுவால் நியமிக்கப்பட்ட நிதித்துறைச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக இருந்தவரும். தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராகவும் உள்ள ரகுராம் ராஜன் 2008 ஆம் ஆண்டு அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். அவை இன்னும் பரிந்துரையாகவே மத்திய அரசிடம் உள்ளது.

சேரமான் பைனான்சியல் சர்வீசஸ்

கேரளாவில் மாநில அரசின் முயற்சியுடன் சேரமான் பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் தனியார் வட்டியில்லா வங்கி இயங்கி வருகிறது. இந்த வகையான வட்டியில்லா கடன் சேவையை தற்போதுள்ள அரசு வங்கிகளே ஒரு சாளரத்தைத் திறந்து தொடங்கினால் இந்தியாவில் சமச்சீரான வளர்ச்சி ஏற்பட்டு, விரைவில் இந்தியா, வளர்ந்த நாடாகும். இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய வங்கியின் முனையங்களாகத் திகழ்கின்றபோது இந்தியா மட்டும் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும் என்கிறார் அப்துர் ரகீப்.

-அ. சர்ஃப்ராஸ்

(Visited 233 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)