பெண்மையைப் போற்றும் இஸ்லாம்

Filed in இஸ்லாம் by on March 6, 2017 0 Comments

பெண்மையை-தாய்மையைப் போற்றுகின்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.

“பெற்றோரின் உரிமைகளைப் பேணி நடக்குமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்துள்ளோம். அவனுடைய தாயோ பலவீனத்தின் மீது பலவீனத்தைச் சுமந்தவளாக அவனை வயிற்றில் சுமந்தாள். பால்குடி மறப்பதற்கோ இரண்டு வருடங்கள் ஆகிப்போனது. (இதன் காரணமாகவே) எனக்கு நன்றி செலுத்துமாறும், பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து மாறும் (அவனுக்கு உபதேசித்தோம்.) என்னிடமே (ஒருநாள்) நீ மீண்டு வர வேண்டியிருக்கும்”. (திருக்குர்ஆன்-31:14)

“பெற்றோரிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுமாறு நாம் மனிதனுக்கு உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைக் கஷ்டப்பட்டு அவனைக் கருவில் சுமந்திருந்தாள்; கஷ்டப்பட்டு அவனைப் பிரசவித்தாள். கருவில் சுமந்த காலமும் பால்குடி காலமும் முப்பது மாதங்களாகும்”. (திருக்குர்ஆன்-46:15)

woman_in_islam-summary‘பிரசவ வேதனை பெண்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை’ என்ற பிரகடனத்தை குர்ஆனின் மேற்கண்ட வசனம் தவறு என்று சுட்டிக்காட்டுகிறது.

மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு கிடைத்த பெரும்பேறு என்பதும், பிரசவ வேதனை பெண்ணுக்கு பெருமிதம் தரும் பெருமை என்பதும், அதனால்தான் பெற்றோருடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

கடமைகளிலோ, அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளிலோ பெண்களுக்கு இஸ்லாம் எந்தவிதமான பாகுபாட்டையும் வைக்கவில்லை. தொழுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும் ஆண்கள் மீது கடமையாக உள்ளதைப்போல பெண்கள் மீதும் கடமையாக உள்ளது.

“உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்” (திருக்குர்ஆன்-3:195)

“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல் களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச்செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (திருக்குர்ஆன்-16:97)

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எந்தவித வேறுபாட்டையும் இஸ்லாம் விதைக்கவில்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பெண்களுக்கு இஸ்லாம் எந்தெந்த உரிமைகளை வழங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நபிகளார் பிறப்பதற்கு முன்புள்ள அரேபியாவின் அறியாமைக் காலத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்வது அவசியம்.

இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவின் ஒரு நூற்றாண்டு காலத்தை ‘அறியாமைக் காலம்’ என்றே சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அங்கு பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. பெண்கள் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம்; ஒரு பெண்ணைப் பல ஆண்கள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

பெண் குழந்தை பிறந்தால் வறுமை வரும்; கவுரவம் குறையும் என்று கருதினார்கள். அதனால் பெண் குழந்தை பிறந்ததும் அதை உயிரோடு குழி தோண்டிப் புதைத்தனர். இத்தகைய பழக்கங்கள் நபிகளாரின் வருகைக்குப் பிறகு குழி தோண்டி புதைக்கப்பட்டன.

அரேபியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான மூடப்பழக்கங்கள் இருந்தன. கணவன் இறந்தால், அவன் சடலம் எரியும் ‘சிதை’ யில் அவனுடன் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘சதி’ என்று பெயர். இது பெண்களுக்கு எதிரான மிகப் பெரிய சதியாகும். விதவைகள் அபசகுனமாகப் பார்க்கப்பட்டனர். மாதவிலக்கின்போது அவர்களை வீட்டை விட்டே விலக்கி வைத்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் ‘கள்ளிப்பால்’ கொடுத்து கொல்லும் பழக்கம் இருந்தது.

இன்றும் பெண் குழந்தை பிறந்தால் கவலை கொள்ளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு இறைவனிடத்தில் பெரும் பரிசு காத்திருக்கிறது.

“எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து தேவைகளை நிறைவேற்றி கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “இரு பெண் மக்கள் இருந்தாலுமா?” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்” என்று பதில் அளித்தார்கள்.

மேலும், ‘ஒருவர் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் இறைவன் அங்கு வானவர்களை அனுப்பி வைக்கின்றான். அவர்கள் அந்த வீட்டை அடைந்து கூறுகின்றனர்: ‘உங்கள் மீது சாந்தி நிலவட்டும்’ என்று! பிறகு அந்த பெண் குழந்தையைச் சிறகால் மூடுகிறார்கள். அதன் தலையைத் தம் கைகளால் தடவியவாறு கூறுகிறார்கள்: ‘இது பலவீனமான உயிர்; எனவே இந்தப் பெண் குழந்தையை எவர் கண்காணித்து வளர்க்கின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் இறைவனின் உதவி கிடைக்கும்’.

குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்த பிறகோ அதைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.

“எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையாலும் மூடத்தனத்தாலும் கொன்று விட்டார்களோ; மேலும் அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கி இருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்து கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகி விட்டார்கள்” என்று திருக்குர்ஆன் (6:140) கூறுகிறது.

“வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்” (17:31) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

மேற்கண்ட நபிமொழிகளும், இறை மறை வசனங்களும், பெண் குழந்தை பிறந்தால் அஞ்சத் தேவை இல்லை என்பதைச் சொல்லும் அருஞ்சொற்கள்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” என்ற நபிகளாரின் முத்தான சொல், பெண்ணின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)