ஈமானில் ஒளிரும் மகிமை!

ஸ்லாம் என்னும் மாளிகை ஐந்து தூண்களில் நிற்கிறது. அதில் முதலாவது மற்றும் முக்கியமான தூண்– ‘இறை நம்பிக்கை’ என்னும் ‘ஈமான்’ ஆகும்.

‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘அறிதல்’, ‘ஒப்புக்கொள்ளுதல்’ என்று பொருள்.

‘இறைவன் ஒருவனே’ என்ற ஓரிறைக் கொள்கையை ஏற்பதே ‘ஈமான்’ என்றும், அதன்படி செயல்படுவதே ‘இஸ்லாம்’ என்றும் கூறுவர்.

ஈமான் என்பது நம்பிக்கையையும், இஸ்லாம் என்பது அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் செயல்களையும் குறிக்கும். அனைத்துக்கும் ‘தீன்’ (மார்க்கம்) என்ற பெயரையே நபிகளார் சூட்டியுள்ளார்கள்.

‘‘அனைத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவன் ஒருவனே; அவன் இணை துணையற்றவன்; அவனுக்கு ஒப்பான பொருள் ஏதுமில்லை; அவனுக்கு ஊண், உறக்கம் இல்லை; பெற்றோர், மனைவி, மக்கள் இல்லை; ஆதியும் அந்தமும், பிறப்பும், இறப்பும் இல்லாதவன். இத்தகைய சர்வ வல்லமை படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என நம்பிக்கை கொள்வதே ‘தவ்ஹீத்’ எனப்படும் ஓரிறைக் கோட்பாடு ஆகும்.

‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெதுவும் இல்லை) – இந்த ‘கலிமா’ தான் இஸ்லாத்தின் மூல மொழி.

‘கலிமா’ என்பதற்கு ‘சொல்’ என்று பொருள்.

இஸ்லாத்தின் இதர கோட்பாடுகள், கட்டளைகள், சட்டங்கள் அனைத்தும், இந்தச் சொல்லை (கலிமா) அடிப்படையாக வைத்தே சொல்லப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாகவே ஒருவர் முஸ்லிம் ஆவதற்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்ற மூல மொழியை முன்மொழிய வேண்டும் என்பதே முதன்மையான– அவசியமான நிபந்தனையாகும்.

‘‘இறைவன் ஒருவனே என்பதில் உள்ள இந்தத் திடமான உறுதிப்பாட்டிலும், சர்வ வல்லமையுள்ள அந்த இறைவனின் ஆட்சி மீது அவர்கள் கொண்டுள்ள எளிய, உற்சாக மான நம்பிக்கைகளிலும் தான் இஸ்லாத்தின் வலிமை இருக்கிறது’’ என்று வரலாற்றாசிரியர் பிலிப் கே.ஹிட்டி கூறிய கருத்து இங்கே நினைவு கூரத்தக்கது.

‘‘இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். நாணமும், இறை நம்பிக்கையின் ஒரு கிளையே’’ என்பது நபிமொழியாகும்.

கிளைகள் என்பது ‘பண்புகள்’ அல்லது ‘செயல்கள்’, ‘கூறுகள்’ எனப்பொருள்படும்.

அந்த ஈமானில் முதன்மையானது ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதாகும். அதில் இறுதியானது, ‘துன்பம் தரும் பொருளை பாதையில் இருந்து அகற்றுவது’.

அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்க்கையின் எந்தத்துறையையும் விட்டு வைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும்–வாழ்வின் அனைத்துத்துறைகளையும் ஈமானின் வழிகாட்டுதலுடன் நிறைவேற்றும் முஸ்லிம்கள் மட்டுமே ஈமானில் முழுமை அடைகிறார்கள்.

வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்திடும் ஈமான், அந்த மனிதர்களின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றி விடுகிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

‘‘அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காகக் கோபித்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து யார் வாழ்கிறாரோ அவர் தனது இறை நம்பிக்கையை முழுமையாக்கிக் கொண்டு விட்டார்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்தினச்சுருக்கமாக ஈமானுக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இறைவனைப் பற்றிய நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணி வேர். ஏகத்துவக் கொள்கையை ஏற்று ‘கலிமா’வை மொழிந்த மறு நொடியே அவர் இஸ்லாமிய குடும்பத்தின் உறுப்பினராகி விடுகிறார்; உடன்பிறப்பாகி விடுகிறார்.

இஸ்லாத்தில் ‘தீண்டாமை’ இல்லை. எனவே புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்தவரின் ‘சாதி’ மாயமாகி விடுகிறது. ஒரே பாத்திரத்தில் உணவருந்தும் பாக்கியம் கிடைக்கிறது. சட்டங்களாலும், சலுகைகளாலும் சாதிக்க முடியாத ‘சாதி ஒழிப்பை’ இஸ்லாத்தின் மூல முழக்கமான இந்த ‘கலிமா’ சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

‘‘இன்றும் தீண்டத்தகாதவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரை முஸ்லிம்கள் ஆரத்தழுவி அன்பு பாராட்டுவதைப் பார்க்கிறோம்”.

“மரணத்திற்கு அப்பால் ஒட்டிக் கொண்டிருக்கிற சாதி அவலத்தை உயிரோடு இருக்கும்போதே துடைத்தெறிந்து விடுகிற ஒரே சமயம் இஸ்லாம் “.

–தினத்தந்தி

(Visited 73 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)