இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை!

மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது.

உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் படித்தோம்.

இவை தவிர இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை ஏராளம்.

எல்லாவிதமான போதைப்பொருட்களும், மதுபானங்களும், சூதாட்டமும் மனிதனுக்குத் தடுக்கப்பட்டவை.

‘‘மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘இவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன் இருப்பினும் அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கின்றது’’ என்று திருக்குர்ஆனில் (2:219) இறைவன் கூறுகின்றான்.

‘‘இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’’ (5:90) என்றும்,

‘‘மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்பு கிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் அவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?’’ (5:91) என்றும்,

‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையுடன் இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை அறிகிறபோதுதான் தொழ வேண்டும்’’ (4:43) என்கிறது, இறைமறை வசனம்.

Masjid_2017மனிதனின் கண்ணியம், மானம், மரியாதையையும் அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது இஸ்லாத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் விபசாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது.

‘‘விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், மிகத் தீய வழியாகவும் இருக்கிறது’’ (17:32) என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

மேலும் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. ‘‘உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை (ஹலால்) அனுமதிக்கப்பட்டதாகவும், வட்டியை (ஹராம்) தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான்’’ (2:275) என்றும், ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்’’ (3:130) என்றும் திருமறை கூறு கிறது.

வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிக் கணக்கு எழுதுபவர்கள் மீதும் நபிகளார் சாபமிட்டார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

தங்க நகை மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ‘‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. அவை ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன’’ என்பது நபிகளாரின் கூற்றாகும்.

ஒரு மனிதரின் கைகளில் தங்க மோதிரத்தைக் கண்ட நபிகளார், அதைக் கழற்றி எறிந்து விட்டு, ‘‘உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதைத் தன் கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா?’’ என்று கேட்டார்கள்.

நபிகளார் சென்ற பிறகு அந்த மோதிரத்தை எடுத்து வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதரிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதர் தூர எறிந்திருக்க அதை ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்’’ என்று கூறி விட்டார்.

மேலும் பெண்கள் அணியக்கூடிய நகைகள், வளையங்கள், காலணிகள், காதணிகள், ஆடைகள் போன்றவற்றை ஆண்கள் அணிவது கூடாது. அது போன்றே ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் அணிவதும் கூடாது.

‘‘பெண்களுடைய ஆடையை அணிகின்ற ஆணையும், ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக’’ என்று நபிகளார் கூறினார்கள்.

தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உண்பது மற்றும் பானம் அருந்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

‘‘நிச்சயமாக தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உண்பவன் அல்லது பானம் அருந்துபவன் தன் வயிற்றுக்குள் நரக நெருப்பையே நிரப்புகிறான்’’ என்பது நபிமொழி.

தடை செய்யப்பட்டவைகளில் சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல் ஆகியவையும் அடங்கும்.

சூனியம் செய்வது நாசத்தைத் தரக்கூடிய ஏழு பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மை இல்லை.

சூனியத்தைக் கற்றுக்கொள்வதைப் பற்றி, ‘‘(உண்மையில்) தங்களுக்குத் தீங்கிழைப்பதையும் எந்தவித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்’’ (2:102) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.

இஸ்லாத்தில் விலக்கப்பட்டவைகளில்–தடுக்கப்பட்டவைகளில் பொதுவாக ‘இணைவைத்தலே’ மிகப்பெரியதாகும்.

‘‘பெரும்பாவங்களில் மிகப்பெரும்பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘‘இறைத்தூதரே! அறிவியுங்கள்’’ என்றோம். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நோவினை செய்வது’’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா நுபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள்)

‘‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் கடும் தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான்’’ (59:7) என்பது திருமறை வசனம்.

இறைவன் மனிதன் மீது விதித்துள்ள எல்லாத் தடைகளும் இறைவன் நம் மீது கொண்டுள்ள கருணையின் பிரதிபலிப்பே ஆகும்.

— பாத்திமா மைந்தன்

(Visited 34 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)