சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Filed in உடல்நலம் by on May 29, 2015 0 Comments

Kidney stone and Treatment

சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ?

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு.

1. ஆண்கள்.
2. வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, 3.வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள்.
சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT AREAS). உதாரணமாக இராமநாதபுரம் மாவட்டம்.
4. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகக்கல் வந்திருந்தால்.
5. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
6. தண்ணீர் மிகவும் குறைவாகக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.
7. சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள்.
8. மிகச் சிலருக்கு கற்களை உருவாக்கும் இரசாயனங்களான கால்சியம், யூரிக்ஆசிட் இரத்தத்தில் அதிகமாக இருந்தால்.

சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

சிறுநீர் என்பது தண்ணீர் மற்றும் பல வித இரசாயனங்கள் கலந்த ஒரு கலவையாகும். அவற்றில் சிலவகை இரசாயனங்கள் கற்களாக மாறும் தன்மை கொண்டவை. சிறுநீரில் இவ்வகை இரசாயனங்களின் அடர்த்தி அவற்றின் கரைசல் அடர்த்தியை விட அதிகமாகும் போது முதலில் கண்ணுக்கு கூட தெரியாத சிறுதுகள்களாக சிறுநீரகத்தின் உள்ளே படிகின்றன. இவற்றின் மேல் துகள்கள் மேலும் மேலும் படியும் போது நாளடைவில் அவை கண்ணுக்கு தெரியும் அளவு சிறுநீரக் கற்கள் ளாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் உள்ள கற்கள் பின்னர் நகர்ந்து சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை, இவற்றிலும் வந்து சேரலாம். ஆரம்பத்தில் மிகச் சிறியதாக உள்ள இக்கற்கள் நாளடைவில் சிறிது சிறிதாக வளர்ந்து பல செ.மீ. அளவிற்கு பெரிதாகி விடலாம்.

பெரும்பாலானவர்களுக்கு வரும் சிறுநீரகக் கல் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்தினால் ஆனவை. அதுவும் பெரும்பாலும் ஆக்சலேட் எனப்படும் இரசாயனத்தின் கூடக் கலவையாக சேர்ந்து வருகின்றது. இவ்வகைக் கல் வரும் சிலருக்கு இரத்தத்தில் பாராதைராயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்வதால் கால்சியம் அதிகமாகி அது சிறுநீரில் வடிகட்டப்பட்டு படிவதால் கற்களாக மாறுகின்றது. ஆனால் பெரும்பாலானவர்க்கு எந்த காரணமும் இருப்பதில்லை. யூரிக் ஆசிட் எனப்படும் இரசாயனத்தால் ஆன கற்கள் கால்சியம் கற்களுக்கு அடுத்தபடி அதிகம் வருபவை. இதற்கும் பெரும்பாலான சமயங்களில் காரணம் தெரிவதில்லை.kidney stone

சிலருக்கு குறிப்பாக பெண்களுக்கு ஸ்ட்ரூவைட் எனப்படும் இரசாயனத்தால் ஏற்படும் கற்கள் சில வகை பாக்டீரியா கிருமிகளால் உண்டாகின்றன. மிக அபூர்வமாக சிலவகை மரபணு கோளாறுகள் காரணமாக சிஸ்டின் எனப்படும் இரசாயனம் சிறுநீரில் வடிகட்டப்பட்டு அது கற்களாக மாறி தொந்திரவு தருவதுண்டு. இன்னொரு வகை மரபுக் கோளாறில் ஆக்சலேட் இரசாயனம் அதிகமாக இரத்தத்தில் உற்பத்தியாவதால் அதிகமாக வடிகட்டப்பட்டு இரண்டு சிறுநீரகங்களிலும் கற்களாக உற்பத்தியாகி மீண்டும் மீண்டும் வருவதுண்டு. ஆனால் மிகப் பெரும்பாலானவர்களுக்கு எந்தக் காரணமும் இன்றி கால்சியம் வகை கற்கள் ஒரு புறச் சிறுநீரகத்தில் ஒரு கல்லாக மட்டும் வருவதே அதிகம்.

சிறுநீரகம் அதன் குழாய்கள் சிறுநீர்ப்பை இவற்றில் கற்கள் வருவது சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது என்பது அந்த காலத்திற்குற்பட்ட ஒரு எகிப்து நாட்டு மம்மியை ஆராய்ந்து பார்த்ததில் கண்டறியப்பட்டுள்ளது. நம் பாரத நாட்டு மருத்துவ வரலாற்றுக் குறிப்பேட்டிலும் சுக்ஷ்ருதா என்ற ஆயுர்வேத நிபுணரின் குறிப்புகளில் சிறுநீர்ப்பை கற்களைப் பற்றியும் அதனை வெளியே எடுக்க செய்யப்படும் அறுவைச் சிகிச்சையைப் பற்றியும் 3,000 வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் உண்ணும் உணவினாலோ அல்லது குடிக்கும் தண்ணீராலோ சிறுநீரகக் கற்கள் வர வாய்ப்பு உள்ளதா?

சிறுநீரக கற்கள் வந்த மிகச் சிலருக்கு யூரிக் ஆசிட் எனப்படும் இரசாயனத்தை அதிகம் உற்பத்தி செய்ய வல்ல உணவுகள் (முக்கியமாக அதிக அசைவ உணவு) ஆக்சலேட் அதிகம் உண்டாக்கும் சிலவகை உணவுகள் இவற்றை அதிகம் உட்கொள்வதால் இவ்வகை கற்கள் அதிகம் வர வாய்ப்பு உண்டு. சில இடங்களில் கடினத் தன்மை(கால்சியம் உப்புக்கள் அதிகம் நீரில் இருப்பதால்) அதிகம் உள்ள நீரை அருந்துவதால் வர வாய்ப்பு உண்டு. மற்றபடி பெரும்பாலான சமயங்களில் நாம் சாப்பிடும் உணவிற்கும் சிறுநீரில் கற்கள் வருவதற்கும் சம்மந்தம் இல்லை என்றே கூறலாம். அதே போன்று சிலவகை உணவுகளை உட்கொள்வதால் (வாழைப் தண்டு, பூ போன்றவை) கற்கள் வராமல் தடுக்கவோ அல்லது வந்த கற்கள் தானாக கரைவதோ இது வரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

சிறுநீரகக் கற்களில் உள்ள இராசயனங்கள்(உப்புகள்) என்னென்ன?

பல்வேறு இடங்களில் சிறுநீரகக் கற்கள்
பெரும்பாலான கற்கள் கால்சியம்(சுண்ணாம்புச் சத்து) கொண்டவை(70-90% வரை). அதனோடு சேர்ந்து வேறு பல இரசாயனங்களும் வெவ்வேறு விதமான கலவைகளாக இருக்கலாம்.

கீழ்கண்ட விதமாக இரசாயனங்களும் வெவ்வேறு விதமான கலவைகளாக இருக்கலாம்.
1. கால்சியம் + ஆக்சலேட்
2. கால்சியம் + பாஸ்பேட்
3. கால்சியம் + மெக்னீசியம் + அம்மோனியம் + பாஸ்பேட்
4. கால்சியம் + யூரிக் ஆசிட் + ஆக்சலேட்
5. யூரிக் ஆசிட்
6. அபூர்வமாக சிஸ்டின், சிலிகான் ஆகியன.

சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள் யாவை?

பெரும்பாலானவர்களுக்கு முதுகு அல்லது வயிற்றில் ஏற்படும் கடுமையான வலியே முதல் அறிகுறியாக இருக்கும். இது சில சமயம் அடிவயிறு, தொடை ஆண், பெண் ஜனன உறுப்புகள் வரை பரவலாம். கற்கள் சிறுநீரக குழாய்களில் நகரும் போதே வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு வாந்தி, மயக்கம் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல், இரத்தம் கலந்து போதல் போன்ற தொந்திரவுகள் உண்டாகலாம். சில சமயம் சிறுநிரகக் கற்கள் சிறுநீர் வரும் பாதையை முழுதாக அடைத்து விட்டால் சிறுநீர் கொஞ்சம் கூட வெளி வராமல் சிறுநீரகச் செயலிழப்பு (கிட்னி ஃபெயில்யர்) உண்டாகலாம். சிலருக்கு சிறுநீர் அடைப்பினால் கிருமித்தொற்று காரணமாக காய்ச்சல் உண்டாகலாம். நமக்கு வரும் நோய்களில் மிகுந்த வலி கூடிய பாதிப்புக்களில் சிறுநீரகத்தில் வரும் கற்களும் ஒன்று.

சிலர் இதனை பிரசவ வலிக்கு ஒப்பாக கூறுவர். இது 10ல் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஒரு முறையேனும் வர வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்களை அதிகமாகப் பாதிக்கின்றது. சிறுநீரகங்களில் உற்பத்தியாகி கீழே சிறுநீர்ப்பாதையில் பயணம் செய்கின்ற சிறுநீரக கற்கள் பெரும்பாலும் எந்த வித சிகிச்சையும் இல்லாமலேயே வெளியே வந்து விடுகின்றன. அளவில் பெரிய, வெளியே வராமல் சிக்கிக் கொண்டு தொந்திரவு கொடுக்கின்ற கற்கள் மட்டுமே பலவித சிகிச்சைகள் மூலம் அகற்றப்பட வேண்டி வருகின்றது. அதிலும் பெரும்பாலானவை எளிய அதிக கஷ்டமில்லாத அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றப்படுகின்றன. மிக அபூர்வமாகத்தான் கடினமான சிக்கலான கற்களை அகற்ற பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றது.

சிறுநீரக்கல் உள்ளதாக சந்தேகம் உள்ளவர்கள் அல்லது கண்டறியப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?kidney_stone_s5_diagnosed

இவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவர் அல்லது சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரை அணுக வேண்டும்.
இவர்களுக்கு உடல் பரிசோதனைக்கு பிறகு முதல் கட்டமாக சில அத்தியாவசிய பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கும். அவையாவன.

1. வயிற்றுப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை
2. வயிற்றுப் பகுதிக்கான எக்ஸ்-ரே படம்.
3. சிறுநீர்ப் பரிசோதனை.
4. இரத்தத்தில் க்ரியேட்டினின், கால்சியம், யூரிக் ஆசிட் ஆகியவற்றின் அளவுகள்.

இந்த பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிலருக்கு வேறு சில சிறப்பு பரிசோதனைகள் செய்ய வேண்டி வரலாம். அவையாவன.

1. இரத்தத்தினுள் ஒரு சிறப்பு மருந்து கொடுத்து அது சிறுநீரகம் வழியாக வெளியேறும் போது எக்ஸ்-ரே படம் எடுத்துப் பார்க்கும் I.V.U எனப்படும் சிறப்பு எக்ஸ்-ரே.
2. 24 மணி நேர சிறுநீரைப் பிடித்து அதில் செய்யப்படும் சில பரிசோதனைகள் ஆகியன.

எனக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?

ஏற்கனவே கூறியிருந்தது போல பெரும்பாலான கற்கள் எந்த சிகிச்சையும் இன்றி தானாகவே வெளியே வந்து விடும். சிறுநீரகக் கற்கள் உள் அல்லது வெளி சிறுநீர்க் குழாயில் நகரும் போது தாங்க முடியாத வலி உண்டாகும். அது சிறுநீரகக் கல் கீழே நகர்ந்து வந்து கொண்டிருப்பதன் அறிகுறியாகும். வலி வந்து இல்லாமல் நின்று விட்டால் அது 1) கல் வெளியே போய் விட்டதனாலும் இருக்கலாம். 2) கல் நகர்ந்து வந்து சிறுநீரகத் தாரையின் குறுகலான இடங்களில் அடைத்துக் கொண்டு நகராமல் நின்று விட்டதாலும் இருக்கலாம். எனவே கல் இருப்பதாக தெரிந்த பிறகு வலி இல்லை என்று விட்டு விடாமல் அந்த கல் முழுவதும் வெளியேறி விட்டதா என்பதை மீண்டும் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உறுதி செய்து கொள்வது முக்கியம். சிறுநீரகக் கல் ஸ்கானிலோ அல்லது எக்ஸ்-ரே படத்திலோ 7 மி.மி.க்கு குறைவான அளவும் வளவளப்பாகவும் இருந்தால் அது தானாகவே வெளியே வந்து விடும். 7-9 மி.மி அளவு இருந்தால் வெளியே வரவும் சிக்கிக் கொள்ளவும் சம பாதி வாய்ப்புக்கள் உண்டு. 9 மி.மி க்கு மேல் இருந்தால் வெளியே வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கல்லில் முட்களாக இருந்தாலும் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

1 செ.மிக்கு குறைவான அளவு உள்ள கல்லாக இருந்தால் உங்களுக்கு முதலில் வலி நிவாரணிகள் கொடுக்கப்படும். 3-4 லிட்டர் தண்ணீர் குடித்து சிறுநீர் நன்கு போகச் செய்யப்படும். சில சமயம் ட்ரிப் மூலம் க்ளுகோஸ் எனப்படும் மருந்து திரவங்களை செலுத்தியும் சிறுநீரின் அளவை அதிகரித்து சிறுநீரகக் கல்லை சிறுநீரின் அழுத்தத்தால் வெளியே தள்ளிக் கொண்டு வர முயற்சி செய்யப்படும். கல்லின் அளவு மிகப் பெரியதாக இருந்தாலோ அல்லது அது ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டு சிறுநீர் வரும் வழியை முழுவதுமாக அடைத்து இருந்தாலோ அல்லது இந்த அடைப்பின் காரணமாக கிருமி தாக்குதல் ஏற்பட்டு காய்ச்சல், குளிர் என தொந்திரவுகள் வந்தாலோ சிறுநீரகக் கல்லையும் அதனால் ஏற்படும் அடைப்பையும் நீக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

எனவே ஆரம்பத்தில் வயிறு அல்லது இடுப்பு வலி காரணமாக சிறுநீரகக் கல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் மருந்துகளால் வலி குறைந்து விட்டாலும் கல் வெளியேறி விட்டதா என்பதை திரும்ப ஸ்கான் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அல்லது சிறுநீரில் கல் வெளியேறுவதை நீங்கள் கண்ணால் பார்த்திருக்க வேண்டும். இதற்கு சிறுநீரை பாத்திரங்களில் பிடித்து ஒரு வேலை சிறுநீரில் கல் வெளியேறி நீங்கள் அதை பார்க்க முடிந்தால் அதை கவனமாக எடுத்து சிறுநீரக மருத்துவரின் உதவியுடன் பரிசோதித்து அதிலுள்ள இரசாயனங்களின் தன்மையை அறிந்து மீண்டும் அதே கல் வராமல் இருக்க தகுந்த ஆகார மாற்றங்கள் மருந்துகள் ஆகியவற்றை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்வதன் மூலம் மீண்டும் கல் வருவதைத் தவிர்க்கலாம்

சிறுநீரகக் கற்களிற்கான அறுவை சிகிச்சைகள் என்னென்ன? அவை யாருக்கு தேவைப்படும்?

சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை மற்ற மருத்துவங்கள் பயனளிக்காத போதோ அல்லது சில சமயங்களில் நேரடியாகவோ தேவைப்படலாம். கீழ்கண்ட சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

1. அனுமதிக்கத் தக்க கால அளவிற்கு பின்னரும் கல் வெளியேறாமல் இருப்பது அல்லது தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருப்பது.
2. தானாக வெளியேற முடியாத அளவு பெரிய அளவு கல் அல்லது சில குறுகலான இடங்களில் கல் சிக்கிக் கொள்வது.
3. சிறுநீர் ஓட்டத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கல்.(ஒரு புறம் உள் சிறுநீர்க் குழாயை ஒரு கல் முற்றிலும் அடைத்துக் கொண்டிருந்தாலும் மற்ற சிறுநீரகம் அடைபடாமல் இருந்தால் சிறுநீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இந்த அடைப்பு ஸ்கானில் மட்டுமே தெரியும்).
4. கல் அடைப்பு ஏற்படுத்தி அதனால் கிருமித் தாக்குதலை உண்டாக்கி காய்ச்சல், வலி இவைகளை உண்டாக்கும் கல்.
5. நிறுத்த முடியாத தொடர்ந்த இரத்தக் கசிவு உண்டாக்கும் கல்.

6. வளர்ந்து கொண்டிருக்கும் கல்(திரும்ப ஸ்கானில் பார்க்கும் போது) சில வருடங்கள் முன்பு வரை சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை என்பது பெரிய அறுவை சிகிச்சையாகவே இருந்தது. மருத்துவமனையில் 4-6 வாரங்களில் தங்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது சிறுநீரகப் பாதையினுள் சிறிய குழாய்கள் மூலம் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்ய உதவும் சிஸ்டோஸ்கோப் (Cystoscope) யுரிடரோஸ்கோப் (Ureteroscope) என்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இதற்கான அறுவை சிகிச்சைகள் மிக எளிதாகிவிட்டன. மருத்துவமனையில் தங்கும் காலமும் மிக குறைந்து விட்டது. இவ்வகை சிகிச்சைகளில் வெவ்வேறு வகை கருவிகளை உபயோகித்து நாம் சிறுநீர்க் குழாயின் வெளித்துவாரம் வழியாக சிறுநீரகப் பாதையில் நுழைந்து சிறுநீர்ப்பை உள்சிறுநீர்க் குழாய் போன்ற இடங்களை அடைந்து அங்குள்ள கற்களை வெளியே எடுக்கலாம். அல்லது எடுக்க முடியாத அளவு பெரிய கல்லாக இருந்தால் அதனை அங்கேயே உடைத்து பொடியாக்கி எடுத்து விடலாம். இதற்கு திசுக்களை வெட்டி உள்ளே நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் சில வகைக் கற்களுக்கு வெளியிலிருந்தே நுண்ணொலி அதிர்வு அலைகளை அனுப்பி கற்களை பொடியாக்கி வெளியேற்றும் சிகிச்சையும் (Extra Corporeal Shockwave Lithotripsy -ESWL) இப்போது பரவலாகக் கிடைக்கின்றது. உங்களுக்கு எந்த வகை சிகிச்சை உகந்தது என்பதற்கு உங்கள் சிறுநீரக மருத்துவர் ஆலோசனை வழங்குவார்.

சிறுநீரகக் கற்கள் ஒரு முறை வந்தால் மீண்டும் வருமா? வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சிறுநீரகக் கல் முதல் முறை வந்தவர்களில் 50% பேருக்கு மீண்டும் கல் வர வாய்ப்பு உண்டு. இரண்டு முறை வந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு இன்னும் அதிகம். சிறுநிரகக் கற்கள் மீண்டும் வராமலிருக்க உங்களுக்கு வந்த சிறுநீரகக் கல்லின் இரசாயனத் தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிய வேண்டியது அவசியம். உங்கள் சிறுநீரகக் கல்லை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்திருந்தால் அதன் ஒரு பகுதியையோ அல்லது நீங்களாகவே அதை வெளியேற்றி அதை எடுத்து வைத்திருந்தால் அக்கல்லையோ பரிசோதனைச் சாலையில் கொடுத்து அதன் இரசாயனக் கூட்டை தெரிந்து கொள்ளலாம்.

அவ்வாறு பரிசோதனைக்கு சிறுநீரகக் கல் கிடைக்காத பட்சத்தில் உங்கள் சிறுநீரக மருத்துவர் கல் உண்டாக்கும் சில இரசாயனங்களின் இரத்த அளவு, சிறுநீரின் அமில காரத்தன்மை , 24 மணி நேர சிறுநீர் பரிசோதனையில் சிறுநீரில் வெளியேறும் இரசாயனங்களின் அளவு ஆகியவற்றை பரிசோதிப்பதன் மூலம் நீங்கள் எந்த வகைக் கல் உற்பத்தி செய்ய அதிக வாய்ப்பு என்பதை யூகிக்க முயற்சி செய்வார். மேலும் உங்கள் உணவுப் பழக்கங்கள் , தொழில், மருத்துவ வரலாறு, குடும்பத்தில் சிறுநீரகக் கல் வியாதி மற்றவர்களுக்கும் உள்ளதா? என்பதையும் கேட்டு அறிந்து கொள்வார். இவைகளை அடிப்படியாக வைத்து உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் கற்கள் மீண்டும் வருவதை பெருமளவு குறைக்க முடியும்.

வாழ்க்கை முறை மாற்றங்களில் மிக எளியதும் முக்கியமானதும் அதிக தண்ணீர் குடிப்பதுதான். தினமும் 2 லிட்டர் அளவிற்கு சிறுநீர் போகும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற திரவங்களை விட தண்ணீரே மிகச் சிறந்தது. வெப்ப நாடான நம் நாட்டில் இதற்கு சுமார் 3.5 முதல் 4 லி வரை நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். இந்த தண்ணீரை நீங்கள் ஒரு தினம் முழுக்க பகிர்ந்து குடிக்க வேண்டும். உதாரணமாக இரவிலும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் (மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கு). அப்போது தான் சிறுநீரில் கல் உண்டாக்கும் இரசாயனங்களின் அடர்த்தி எப்போதும் குறைந்து அவை படிகமாக மாறுவது தவிர்க்கப்படும்.

முன்பு கால்சியம் கற்கள் வந்தவர்களுக்கு ஆகாரத்தில் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கும்படி கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆராய்ச்சி முடிவுகளின்படி கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கால்சியம் கற்கள் மீண்டும் வருவதை பெருமளவு குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கால்சியம் கற்கள் வந்தவர்கள் கால்சியம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கால்சியம் மாத்திரைகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

அதே சமயம் உணவில் உப்பின் அளவை குறைப்பது கால்சியம் கற்களின் வருகையை குறைப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விட்டமின்- D உள்ள மாத்திரைகளையும் கால்சியம் உள்ள அல்சர் மருந்துகளையும் தவிர்க்க வேண்டும். உங்கள் சிறுநீர் அதிக அமிலத் தன்மை கொண்டதாக இருந்தாலோ அல்லது உங்கள் சிறுநீரகக் கல்லில் யூரிக் ஆசிட் இருந்திருந்தாலோ அசைவ உணவுகளான கோழி, மீன், ஆடு இவைகளின் இறைச்சிகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

அதிலும் சிஸ்டின் எனப்படும் அபூர்வ கற்கள் உள்ளவர்கள் ஒரு காலன் அளவு தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். அப்போதுதான் சிஸ்டின் இரசாயனம் சிறுநீரில் படியாமல் செய்ய முடியும்.

சிறுநீரகக் கற்கள் வருவதை குறைக்க உதவும் மருந்துகள்.

உங்கள் சிறுநீரக மருத்துவர் கால்சியம், யூரிக் ஆசிட் வகை கற்களுக்கு சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கக் கூடும். இவை சிறுநீரில் அமில காரத் தன்மையை மாற்ற உதவும். அல்லோப்யூரினால் என்ற மருந்து யூரிக் ஆசிட் இரசாயனத்தின் இரத்த அளவைக் குறைக்க உதவும் தையாசைட் என்ற மருந்து சிறுநீரில் கால்சியம் அதிகமாக வெளியேறுவதை தடுத்து கால்சியம் கற்களை குறைக்க உதவும். கால்சியம் சத்தை சிறுகுடலிருந்து சிலர் அதிகம் கிரகிப்பதால் அவர்களுக்கு கால்சியம் கற்கள் வரலாம். இவர்கள் பரிசோதனையில் அவ்வாறு கண்டறியப்பட்டிருந்தால் சோடியம் செல்லுலோஸ் என்ற மருந்தை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குடலில் அதிகம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம்.

ஸ்ட்ரூவைட் எனப்படும் கிருமிகளால் வரும் கற்களை அறுவை சிகிச்சையில் முழுவதுமாக எடுக்க முயற்சிக்க வேண்டும். எடுத்த பிறகு இந்த கற்கள் மீண்டும் வராமலிருக்க சிறுநீரில் கிருமிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடிக்கடி சிறுநீரை கிருமிகளுக்காக பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயம் தொடர்ந்து கிருமிக் கொல்லி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டி வரும். சில சமயம் இந்த கற்கள் மிகப்பெரியதாக ஒரு மான் கொம்பு போல வளர்ந்த பிறதே கண்டுபிடிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அப்போது அவைகளை அறுவை சிகிச்சையில் எடுக்க முடியாது. அவ்வாறெனில் மருத்துவர் உங்களுக்கு அசிடோ ஹெக்சாமிக் ஆசிட்(Aceto Hexamic Acid – AHA) எனப்படும் மருந்தை கிருமிக் கொல்லி மருந்துகளோடு தொடர்ந்து எடுக்க சொல்லக் கூடும். இந்த மருந்து இந்தியாவில் கிடைப்பதில்லை.

அபூர்வமாக பாராதைராயிட் அதிகம் சுரப்பதால் இரத்தத்தில் கால்சியம் அதிகமாகி உங்களுக்கு கால்சியம் கற்கள் அதிகம் வருவதாக கண்டறியப்பட்டிருந்தால் பாராதைராய்ட் சுரப்பியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுவது இதற்கு முழு குணம் அளிக்கும். மரபணு கோளாறு காரணமாக ஆக்சலேட் அதிகம் இரத்தத்தில் உற்பத்தி செய்யும் நோய் உள்ளவர்களுக்கு பைரிடாக்சின் என்ற விட்டமின் மாத்திரை அதிக அளவு கொடுப்பது சில சமயம் பலனளிக்கக் கூடும்

நாட்டு மருந்துகள், ஹோமியோபதி மருந்துகள், வாழைத் தண்டு சாறு ஆகியவை சிறுநீரகக் கற்களை கரைத்து விடுவதாக கூறுவது உண்மையா?

பெரும்பாலான சிறுநீரகக் கற்கள் தானாகவே வெளியேறக் கூடியவை என்பதால் இந்த மருந்துகளை சாப்பிட்டதனால் கற்கள் கரைந்து விட்டன என்பது உண்மையாக இருக்க வேண்டியதில்லை. அறிவியல் பூர்வமாக இவை அனைத்தும் சிறுநீரகக் கற்களை கரைக்க வல்லவை என்பது நிரூபிக்கப்படவில்லை. வாழைத் தண்டு சாறு சிலவகை சிறுநீரகக் கற்களை அதிகப்படுத்தக் கூடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிக்கலான சிறுநீரகக் கற்களுக்கு இவைகளை முயற்சிப்பது ஆபத்தானது கூட.

சிறுநீரகக் கற்கள் மீண்டும் வராமலிருக்க கடைப் பிடிக்க வேண்டிய ஆகாரக கட்டுப்பாடுகள் என்னென்ன?

பொதுவாக தண்ணீர் அதிகம் குடித்து ஒரு நாளைக்கு 2 – 2.5 லிட்டர் சிறுநீர் வருமாறு பார்த்துக் கொள்வது எல்லா வகைக் கற்களுக்கும் பொருந்தும் மற்றபடி வொவ்வொரு வகைக் கல்லுக்கும் சில குறிப்பிட்ட ஆகாரங்களை தவிர்ப்பது நன்று. சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க பொதுவான உணவு முறை என்று கிடையாது.
கீழ்கண்டபடி ஒவ்வொரு வகைக் கற்களுக்கும் உணவு முறைக் கட்டுப்பாடுகள் மாறுபடும். உங்களுக்கு வந்தது எந்த வகைக் கல் என்பதைப் பொறுத்து சிறுநீரக மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

கால்சியம் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

சாக்கலேட், கோகோ கலந்த தின்பண்டங்கள் , ராகி , பாப்கார்ன், சோயா, முட்டை மஞ்சள் , இறால், மீன், மூளை, ஈரல், நாட்டுச் சர்க்கரை , பீன்ஸ், பட்டாணி அதிக உப்பு உள்ள உணவுகள், முந்திரி , பாதாம், போன்ற பருப்பு வகைகள்.

ஆக்சலேட் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

முருங்கைக் கீரை, பசலைக் கீரை, கருவேப்பிலை சட்னி , பீட்ருட், மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்குகள், வாழைப் பூ, பச்சை மிளகாய், பழங்கள் – நெல்லிப் பழம், பலாப்பழம், மாம்பழம்.
மாட்டிறைச்சி , தேநீர், பீர்.

யூரிக் ஆசிட் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள்

பீன்ஸ் , கருவாடு, இறைச்சி , மீன் , கோழி,
மூளை, ஈரல் , முதலான உறுப்புகள்.
ஓட்ஸ் , பட்டாணி.

(Visited 447 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)