கொஞ்சம் தமிழ் கொஞ்சம் இலக்கணம் – 03

– செம்பியன்

Learn  Tamil Grammer
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?

நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு –  இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.

நாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே..  அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்று எழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு – இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.

குசுடுதுபுறு என்பவற்றில் ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?

முடியாது.

அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு – இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.

எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?

உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.

போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. எழுத்தில் போலியா?

ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.

‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் ‘அ’  ‘இ’ சேர்ந்து போலியாகும். எப்படி? ‘ஐவனம்’ என்பதை ‘அஇவனம்’ என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)

‘ஔவை’ என்பதை ‘அ உவை’ என எழுதலாம்.

மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ‘ ஐயப்பன் ‘  ‘அய்யப்பன்’ )

ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்று மாதிரியாக எழுதலாம்.

ழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள் என இரு பிரிவுகள் உண்டு.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.

உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.

அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.

உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.

உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால்.
அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.

பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்

அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.

பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:

அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.

தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?

திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை –  நான், நாம்; முன்னிலை – நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.

ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?

உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.

கனி=பெயர்ச் சொல்

பழுத்தது=வினைச் சொல்

கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);

கனி நனி சுவைத்தது – இதில் ‘நனி’ என்பது உரிச்சொல்.

எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?

தவறுகள் பலவகை. சொற்பொருள் தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)

ஒற்றெழுத்துப் பிழை  (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)

முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’ வரக் கூடாது)

ஒருமை பன்மை பிழைகள் – ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ) )

ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது – (ஓர் கண்ணாடி – ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)

செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.

இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

ஆங்கில மொழியில் ‘a’, ‘an’  எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?

உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.

ஓர் இரவு
ஓர் இலை
ஓர் ஊர்
ஓர் அணு
ஓர் ஏர்
ஓர் இந்தியன்

உயிர்மெய் எழுத்துக்கு  முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்

ஒரு சொல்
ஒரு வில்
ஒரு வீடு
ஒரு நாற்காலி

‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?

உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.

ஈருடல்
ஈர் ஓடை
ஈர் உருளி
ஈர் இரண்டு
ஈர் உளி

இரு கப்பல்கள்
இரு புலிகள்
இரு தலைகள்

தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.

(தமிழ் தொடரும்)

சென்ற அத்தியாயம் : கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம் – 02

(Visited 515 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)