திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூர்

திருவாரூரில் வருகிற14/02/2016-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அப்போது வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 14/02/2016-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் டிரைவர், தையல் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தையல்பயிற்சி, கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி, ஆங்கில மொழிதிறன் பயிற்சி, விற்பனையாளர் பயிற்சி மற்றும் பல திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேருவதற்கான பதிவும், அயல்நாடு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவும் நடைபெறும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கிடைக்கும்.

முகாமில் கலந்து கொள்ள வரும் வேலை தேடுவோர் கல்வி சான்றிதழ் 5 நகல்களும், சுயவிபர படிவம் 5 நகல்களும் கொண்டு வர வேண்டும். அசல் கல்வி சான்றிதழ்கள் கொண்டு வர தேவையில்லை. இந்த வேலை வாய்ப்பு முகாமை அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன், உதவி கலெக்டர்கள் முத்து மீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி(மன்னார்குடி), மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமிஅம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(Visited 120 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)